சிறைப்பட்ட பௌத்த பிக்குகளுக்கான சட்டவிதிமுறைகளை மீளாய்வு செய்ய ஜனாதிபதி இரு வார கால அவகாசம்!
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மற்றும் அங்கிருந்து வெளிப்புறங்களுக்கு அழைத்துச் செல்லப்படும் பௌத்த பிக்குகள் தொடர்பில் தற்போது நடைமுறையிலுள்ள சட்டவிதிமுறைகளை மீளாய்வு செய்து, புதிய நிலையியற் கட்டளைகள் மற்றும் விதிமுறைகளுக்கான திருத்தங்களைச் சமர்ப்பிப்பதற்காகக் குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
சட்டமா அதிபர் திணைக்களம், நீதி அமைச்சு, பொது நிர்வாக அமைச்சு, பௌத்த சாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஆகியோரின் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக இக்குழு அமையவுள்ளது.
தற்போதுள்ள ஏற்பாடுகளை விரிவாக ஆராய்ந்து பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கு இக்குழுவுக்கு இரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பௌத்த பிக்குகளைப் பாதிக்கும் எந்தவொரு ஏற்பாடும் மகா சங்கத்தினருடன் கலந்தாலோசிக்கப்பட்ட பின்னரே திருத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.
சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் நடத்தப்பட்ட விதம் தொடர்பில் எழுந்த கவலைகளைத் தொடர்ந்து, ஜனாதிபதி செயலகத்தில் இன்று (அக்டோபர் 08) மகா சங்கத்தினருடன் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே ஜனாதிபதி திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்போதைய சட்டக்கட்டமைப்பு குறித்து விளக்கிய ஜனாதிபதி, சிறைச்சாலை நிர்வாகமானது 1877 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் (Prisons Ordinance) மூலமும், அதன் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிலையியற் கட்டளைகள் மூலமுமே நிர்வகிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். தற்போதைய சட்டக்கட்டமைப்பானது பொதுவாக கைதிகளை மட்டுமே முதன்மையாகக் கவனத்திற் கொள்கிறதே தவிர, பௌத்த பிக்குகள் தொடர்பில் பிரத்தியேகமான குறைந்தபட்ச ஏற்பாடுகளையே கொண்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சிறைத் தண்டனை அனுபவிக்கும் பிக்குகள் சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லப்படும் போதே ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் பார்வைக்கு உட்படுவதால் இந்தச் சிக்கல் எழுகின்றது என்றும், அண்மையில் இடம்பெற்ற சம்பவம் பௌத்தர்களிடையேயும் மகா சங்கத்தினரிடேயும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.
தற்போதுள்ள சட்டங்கள் காலாவதியானவையாக இருப்பின், தனிப்பட்ட சம்பவங்களுக்கு ஏற்ப தற்காலிக அறிவுறுத்தல்களை வழங்குவதை விடுத்து, உரிய சட்டவாக்க முறையின் ஊடாகவே அவை திருத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி திசாநாயக்க வலியுறுத்தினார்.
"சட்டம் என்பது எனது விருப்பத்திற்கு ஏற்ப இயங்கும் எனது சட்டமாக மாறக்கூடாது" எனத் தெரிவித்த அவர், தனது தனிப்பட்ட விருப்பங்கள் சட்டத்திற்குப் பதிலாக அமைய முடியாது என்றும் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.
மேலும், புதிய விதிமுறைகள் குறிப்பிட்ட ஒரு பிக்குவை மட்டும் இலக்காகக் கொண்டு உருவாக்கப்படாமல், ஒட்டுமொத்த சிறைச்சாலை தொகுதிக்குமே பொதுவானதாகப் பொருந்த வேண்டும் என்றும், பிக்குகள் காவலில் இருக்கும் போதும் வெளியே அழைத்துச் செல்லப்படும் போதும் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதை தெளிவுபடுத்துவதாக அமைய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
சியாம், அமரபுர மற்றும் ராமஞ்ஞ ஆகிய மகா நிகாயங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மகா சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள், பௌத்த சாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி மற்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.