1,540 புதிய கிராம நிலதாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கினார் ஜனாதிபதி
கிராமப்புற மக்களை நகரங்களை நோக்கி ஈர்ப்பதை விட, கிராமங்களுக்குள்ளேயே பொருளாதார வாய்ப்புகளையும் வசதிகளையும் உருவாக்குவதே அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திப் பாதையின் முதன்மை நோக்கமாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கிராம நிலதாரி சேவையின் III ஆம் தரத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட 1,540 உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரை ஆற்றுகையிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
கிராமங்களையும் நகரங்களையும் இணைக்கும் மேம்படுத்தப்பட்ட வீதிப் பிணையம், திறம்பட்ட தகவல் தொடர்பு முறைமை மற்றும் வினைத்திறனான பொதுச் சேவை ஆகியவற்றை ஏற்படுத்துவதன் அவசியத்தை ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார். அத்துடன், டிஜிட்டல் பொருளாதார அமைச்சுடன் இணைந்து அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் நாடு தழுவிய தகவல் தொடர்பு முறைமை உருவாக்கப்படும் என்றும், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் (Budget) நிதியுதவியுடன் அடுத்த ஆண்டில் இரண்டு மாவட்டங்களில் முன்னோடித் திட்டம் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
புதிய கிராம நிலதாரி சேவைப் பிரமாணக் குறிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, பரீட்சைப் பேறுகள் மற்றும் நேர்முகப் பரீட்சை திறமையின் (Merit) அடிப்படையில் மட்டுமே இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மாற்றியமைக்கப்பட்ட சேவை முறையின் கீழ், கிராம நிலதாரி உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவுகள் உயர்த்தப்பட்டுள்ளன:
அலுவலகக் கொடுப்பனவு : ரூ. 1,000 இலிருந்து ரூ. 2,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சீருடைக் கொடுப்பனவு : ரூ. 5,000 இலிருந்து ரூ. 15,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
எழுதுபொருள் கொள்வனவுக் கொடுப்பனவு : ரூ. 1,500 இலிருந்து ரூ. 3,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், பொதுச் சேவை மறுசீரமைப்புகள் குறித்து உரையாற்றிய ஜனாதிபதி திசாநாயக்க, மக்களுக்கு ஏற்படும் சுமைகளைக் குறைக்கும் வகையில் நிதி அமைச்சினால் அடையாளங் காணப்பட்ட 33 அரச நிறுவனங்களை ஒன்றிணைக்க அல்லது மூடத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறினார். அத்துடன், அரசு ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் மூன்று கட்டங்களாக உயர்த்தப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் 2027 ஆம் ஆண்டளவில் ரூ. 330 பில்லியன் கூடுதல் செலவீனம் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன , மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் பிரதி அமைச்சர் ருவன் செனரத் , ஜனாதிபதியின் பணிப்பாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி , பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி , அமைச்சின் செயலாளர் எஸ். அலோக பண்டார உள்ளிட்ட பல உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.