ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊழல் எதிர்ப்புத் (திருத்தச்) சட்டமூலம் எவ்வித வாக்கெடுப்புமின்றித் திருத்தங்களுடன் இன்று (08) வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது எதிர்கொள்ளப்பட்ட சட்ட ரீதியான சிக்கல்கள், வியாக்கியானக் குழப்பங்கள், நிர்வாக மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான சவால்களுக்குத் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டு இப்புதிய திருத்தச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.
இச்சட்டமூலத்தின் மூலம், மூலச் சட்டத்தின் சிங்கள மற்றும் ஆங்கிலப் உரைகளுக்கு இடையேயான வேறுபாடுகள் சீர்செய்யப்பட்டுள்ளதுடன், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பிலான விசாரணைகள் மற்றும் வழக்குத் தொடர்தல் நடவடிக்கைகள் மிகவும் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
மேலும், லஞ்ச ஊழல் பற்றிய சாட்டியங்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் (CIABOC) நிர்வாக நடைமுறைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், சொத்து மற்றும் பொறுப்புப் பிரகடனங்களை மத்திய மின்னணு முறைமை ஊடாகச் சமர்ப்பிக்கும் நடைமுறைகளும் இத்திருத்தத்தின் மூலம் நவீனமயமாக்கப்பட்டுள்ளன.
நாட்டில் ஊழலுக்கு எதிரான சட்ட மற்றும் நிறுவனக் கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்தி, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் திறம்பட்ட சட்ட அமலாக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் இத்திருத்தங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.