அனோஜனின் மரண தண்டனையை ரத்து செய்ய முயற்சி: எம்பி சாணக்கியன் பிபிசிக்கு தகவல்!
முகநூல் பதிவொன்றை அடிப்படையாகக் கொண்டு, சவூதி அரேபியாவில் 24 வயதான இலங்கை புலம்பெயர் தொழிலாளி சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக இலங்கையைச் சேர்ந்த சட்டப் பிரதிநிதிகள் குழுவொன்று சவூதி அரேபியாவைச் சென்றடைந்துள்ளது.
இது தொடர்பில் பிபிசி நியூஸ்டே (BBC Newsday) சேவையிடம் கருத்து வெளியிட்ட இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், "மூன்று சிரேஷ்ட சட்டத்தரணிகள் மற்றும் கொழும்பிலுள்ள சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதி ஒருவர் அடங்கிய குழுவொன்றே சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ளது. சவூதி அரேபிய அரசிடமிருந்து இதுவரை உத்தியோகபூர்வ பதில்கள் எதுவும் கிடைக்கப்பெறாத போதிலும், இலங்கை ஜனாதிபதியினால் அனுப்பப்பட்ட இந்த விசேட தூதுக்குழு தற்போது அங்கு முகாமிட்டுள்ளது" என உறுதிப்படுத்தினார்.
அத்துடன், எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்குள் மேன்முறையீடு செய்வதற்கான காலக்கெடு உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய சாணக்கியன் இராசமாணிக்கம், அரசாங்கம் இருவழி அணுகுமுறையைக் கையாண்டு வருவதாக விளக்கமளித்தார். அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு கோருவதுடன், மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பான மறு மேன்முறையீட்டை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, சிறையில் உள்ள அனோஜன் மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதாக இலங்கையிலுள்ள அவரது தம்பி தெரிவித்திருந்த போதிலும், சக கைதி ஒருவருடன் மோதல் மட்டுமே இடம்பெற்றதாகவும் கூர்மையான ஆயுதத் தாக்குதல்கள் எதுவும் நிகழவில்லை என்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தியிருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்த சாணக்கியன் இராசமாணிக்கம், சவூதி அரேபிய அரசாங்கம் வழங்கிய வாக்குமூலத்தையே அதிகாரிகள் நம்பியிருக்கும் அதேவேளை, இ விவகாரத்தில் அரசாங்கம் மிகுந்த அவதானத்துடனும் நம்பிக்கையுடனும் செயற்பட்டு வருவதாக மேலும் தெரிவித்தார்.