என்.டி.பி வங்கி நிதி மோசடி 13.6 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பு: தணிக்கை அறிக்கையில் பரபரப்புத் தகவல்கள்!
தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) மோசடி பரிவர்த்தனைகள் மூலம் ஏற்பட்டுள்ள நிதி இழப்பு 13.6 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளதுடன், வங்கியின் அகக்கட்டுப்பாட்டு கட்டமைப்பில் நிலவும் பலகட்ட நிர்வாக வீழ்ச்சிகளையும் பலவீனங்களையும் இறுதிக்கட்ட தணிக்கை அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
இவ்விவகாரம் மற்றும் அது தொடர்பான இறுதிக்கட்ட தணிக்கை அறிக்கை குறித்து ஆராய்வதற்காக, பாராளுமன்றத்தின் அரசாங்க நிதி பற்றிய குழு (COPF) அதன் தர்மகர்த்தா நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் கூடியது. இதன்போது இலங்கை மத்திய வங்கியின் உயர் அதிகாரிகள் குழுவின் முன் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த குழுவின் தகவல்களின்படி, 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட தணிக்கை ஆய்வில், மொத்தம் 13,639,664,684 (13.6 பில்லியனுக்கும் அதிகமான) ரூபா நிதி மோசடி செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 2026 ஏப்ரல் 6 ஆம் திகதி என்.டி.பி வங்கியினால் ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட 13.2 பில்லியன் ரூபாவைக் காட்டிலும், தற்போது வெளிவந்துள்ள தொகை சுமார் 400 மில்லியன் ரூபாவால் அதிகமாகும். அத்துடன், இடைக்காலத் தணிக்கை அறிக்கையின் அடிப்படையில் கடந்த ஜூன் 26 ஆம் திகதி வங்கியினால் வெளியிடப்பட்ட தொகையை விடவும் இது 60 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 29 ஆம் திகதி வங்கி வெளியிட்ட விபரங்களின்படி, இந்த நிதி மோசடியின் தாக்கம் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது:
2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதிக்கு முன்னர்: 1.5 பில்லியன் ரூபா.
2025 ஆம் ஆண்டிற்குள்: 9.6 பில்லியன் ரூபா.
2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்குள்: 2.5 பில்லியன் ரூபா.
எனினும், இந்த நிதி மோசடியினால் வங்கியின் வாடிக்கையாளர்களின் கணக்குகள் எவையும் பாதிக்கப்படவில்லை என்பதை இறுதிக்கட்ட தணிக்கை அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
அதேவேளை, பொது மின்னணு நிதிப் பரிமாற்றக் கட்டமைப்பு, வங்கியின் முதன்மை மையக் கணினி அமைப்பில் (Core banking system) பயனர்களின் செயல்பாடுகள், மற்றும் பயனர்களின் கடவுச்சொல் மற்றும் அணுகல் விபரங்களைப் பராமரித்தல் ஆகியவற்றில் கடுமையான நிர்வாக வீழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளதாகப் புலனாய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், தினசரிப் பரிவர்த்தனைகளைக் கண்காணித்தல், தினசரி கணக்குச் சரிபார்த்தல் , நிதிசார் இணக்கப்பாடு , அகத்தணிக்கை, கிளைக் கூட்டமைப்புகளின் நிர்வாகம் மற்றும் இயக்கவியல் இடர் மேலாண்மை ஆகியவற்றிலும் பெருமளவிலான பலவீனங்கள் நிலவுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தின் போது, இலங்கை கணக்கீட்டு மற்றும் தணிக்கை தரநிலைகள் கண்காணிப்பு சபை மற்றும் 'டெலோய்ட் டச் தோமாட்சு இந்தியா எல்.எல்.பி' (Deloitte Touche Tohmatsu India LLP) ஆகிய நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முடிவுகளும் விரிவாக ஆராயப்பட்டன. குறிப்பாக, வங்கியின் நிதியறிக்கைகளில் இடம்பெற்ற முறைகேடுகளை வெளிவாரித் தணிக்கையாளர்கள் கண்டறியத் தவறியமை குறித்து இதன்போது தீவிர கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், நிறுவன நிர்வாகம் மற்றும் இடர் மேலாண்மை தொடர்பாக வங்கியின் சிரேஷ்ட நிர்வாகத்தின் பொறுப்புக்கூறல் குறித்தும் குழுவினர் கேள்விகளை எழுப்பினர். என்.டி.பி வங்கியின் கணிசமான பங்குகள் பொதுமக்களின் நிதியையும் அரச நிதியையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்களால் கைவசம் வைக்கப்பட்டிருப்பதால், இது பொதுமக்களின் பணத்திற்கு ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை வெளியிட்டனர்.
இவற்றுடன், மத்தியமயமாக்கப்பட்ட மோசடி கண்காணிப்பு அமைப்பையொன்றை உருவாக்குவதில் லங்காபே (LankaPay) நிறுவனம் அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்தும் குழு ஆராய்ந்ததுடன், ஒவ்வொரு வங்கிகளுக்குள்ளும் மோசடிகளைக் கண்டறியும் வேலைத்திட்டங்களை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியது.
இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்காக, என்.டி.பி வங்கியின் அகக்கட்டுப்பாடுகள், நிர்வாகக் கட்டமைப்புகள் மற்றும் இயக்கவியல் நடைமுறைகளில் விரிவான சீர்திருத்தங்களை மேற்கோள்ளுமாறு இறுதிக்கட்ட தணிக்கை அறிக்கை பரிந்துரைத்துள்ளது.
இந்த நிதிக்குழுவுக் கூட்டத்தில் பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, நிசாந்த ஜெயவீர மற்றும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.