கொம்பனித்தெரு ஆலய நகை திருட்டு: பிரதான குருக்களை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு
கொழும்பு கொம்பனித்தெரு ஸ்ரீ சிவசுப்பிரமணியர் சுவாமி ஆலயத்திற்குச் சொந்தமான கோடிக்கணக்கிலான தங்க நகைகளைத் திருடி அடகு வைத்த குற்றச்சாட்டின் பேரில், அவ்வாலயத்தின் பிரதான குருக்களை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜரான கொம்பனித்தெரு பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் தெரிவிக்கையில், ஆலய நிர்வாகத்தினரால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாகவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
ஆலயத்தின் நகைப்பெட்டகப் பொறுப்பாளராகச் செயற்பட்ட பிரதான குருக்களே இந்நகைத் திருட்டில் ஈடுபட்டுள்ளார் என்பது முதற்கட்ட விசாரணைகளில் உறுதியாகியுள்ளது. நகைகள் வைக்கப்பட்டிருந்த பெட்டகத்தின் சாவி சந்தேகநபரிடமே இருந்துள்ளது.
சந்தேகநபரான குருக்கள், ஆலய நகைகளைக் கொட்டாஞ்சேனைப் பகுதியில் உள்ள மூன்று அடகு பிடிக்கும் நிலையங்களில் (Pawnshops) அடகு வைத்து, சுமார் 2 கோடியே 67 இலட்சம் ரூபா பணத்தைப் பெற்றுள்ளார். அப்பணத்தைக் கொண்டு அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 29 ஆம் திகதி ஆலய உற்சவத்தின் போது நகைப்பெட்டகத்தைத் திறந்தபோதே நகைகள் திருடப்பட்டிருந்தமை நிர்வாகத்தினருக்குத் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் நகைகளை அடகு வைத்தமைக்கான பற்றுச்சீட்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றைக் கொண்டு ஆலய நிர்வாகத்தினர் நகைகளை மீட்டுள்ள போதிலும், தற்போது சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார். அவரது தொலைபேசி தரவுப் பதிவுகளைப் பெறுவதற்கு அனுமதி தருமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்தனர்.
கருத்துகளை ஆராய்ந்த நீதிவான், சந்தேகநபருக்கு வெளிநாடு செல்வதற்கான பயணத்தடை விதித்ததுடன், அவரை உடனடியாகக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார்.
கொட்டாஞ்சேனைப் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய இச்சந்தேகநபர் கடந்த 10 வருடங்களாக இவ்வாலயத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். 2024 ஆம் ஆண்டு முதல் சுமார் 90 தடவைகளுக்கும் மேலாக நகைகளைத் திருடி அடகு வைப்பதும், பின்னர் மீட்டு மீண்டும் பெட்டகத்தில் வைப்பதுமாகச் செயற்பட்டு வந்துள்ளார் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கொம்பனித்தெரு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.