ஆஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை
ஆஸ்திரேலியாவின் மெல்போன் நகரிலுள்ள பௌத்த விகாரையில் ஆறு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டில், இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பௌத்த துறவி ஒருவருக்கு 13 ஆண்டுகள் மற்றும் இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மெல்போனின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள 'தம்ம சரண' விகாரையின் தலைமைத் துறவியாகப் பணியாற்றிய 71 வயதான நாவோடுன்ன விஜித என்பவருக்கே விக்டோரியா மாநிலத்தின் கவுண்டி நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது.
இலங்கை பௌத்த சமூகத்தினரிடையே தனக்கிருந்த மரியாதைக்குரிய பதவியையும் நம்பிக்கையையும் துஷ்பிரயோகம் செய்து, இத்தகைய தீவிரமான குற்றச் செயலில் இவர் ஈடுபட்டுள்ளதாகத் தீர்ப்பை வழங்கிய நீதிபதி பர்தீப் திவானா சுட்டிக்காட்டினார்.
கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் மெல்போனின் ஸ்பிரிங்வேல் மற்றும் கீஸ்பரோ பகுதிகளில் செயற்பட்ட விகாரையிலேயே இச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. விகாரைக்கு பெற்றோருடன் வழிபாட்டிற்கு வந்த சிறுமிகளைத் தனது அறைக்கு அழைத்துச் சென்று இவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். சில சந்தர்ப்பங்களில் சிறுமிகளின் பெற்றோர்கள் பக்கத்து அறைகளில் இருந்தபோதே இக்குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன.
சிறுமி ஒருவரை பாலியல் ஊடுருவலுக்கு உட்படுத்திய 9 குற்றச்சாட்டுகள் மற்றும் சிறுமியருடன் ஒழுக்கக்கேடாக நடந்துகொண்ட 8 குற்றச்சாட்டுகள் உட்பட மொத்தம் 17 குற்றச்சாட்டுகளில் நாவோடுன்ன விஜித குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்தது.
சிறுமிகளின் பெற்றோர் விகாரையை பாதுகாப்பான இடம் என நம்பியிருந்த நிலையில், அந்த நம்பிக்கையை இவர் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என்றும், இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலத்த உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
சம்பவம் நடந்து பல ஆண்டுகளுக்குப் பிறகே பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். இதனையடுத்து 2023 ஆம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டார். இருப்பினும், விசாரணை முழுவதும் இவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வந்ததுடன், முறைப்பாட்டாளர்கள் சிலரைத் தனக்கு நினைவில்லை என்றும் வாதிட்டார்.
வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பின்னர், நீதிமன்றத்தில் இருந்த தனது ஆதரவாளர்களைப் பார்த்து இத்துறவி சிரித்து கையசைத்தமை பாதிக்கப்பட்ட பெண்களிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இலங்கையில் பிறந்து தனது 15 ஆவது வயதில் பௌத்த துறவியாக இணைந்த இவர், பின்னர் சுவீடனுக்குச் சென்று குடியுரிமை பெற்றார். அதன்பின்னரே 1994 இல் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று தலைமைத் துறவியாகப் பொறுப்பேற்றார்.
தண்டனைக் காலத்தை நிறைவு செய்த பின்னர் இவர் ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிணையில் வெளிவர முடியாதவாறு குறைந்தது 9 ஆண்டுகள் மற்றும் 4 மாத சிறைவாசத்தை இவர் கட்டாயம் அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.