யாழ். ஆலயத் திருவிழாக்களில் அசம்பாவிதம்: கண் பாதிப்பால் 235 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
பண்டத்தரிப்பு, பிரான்பற்று கிராமத்திலுள்ள ஆலயத்தின் நேற்றைய (20) இரவுத் திருவிழாவின்போது இடம்பெற்ற வாணவேடிக்கை புகை மற்றும் அதிக ஒளிச்செறிவு கொண்ட மின்விளக்குகளின் பயன்பாடு காரணமாக கண் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 385 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களில் தற்பொழுது நடைபெற்றுவரும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் உட்பட பல பாடசாலை மாணவர்களும் அடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, நேற்றைய தினம் நவாலி அந்திரான் கிராமத்தில் இடம்பெற்ற மற்றுமொரு ஆலயத் திருவிழாவின்போதும் வாணவேடிக்கை காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது அருகிலிருந்த பனைமரம் மற்றும் பாதுகாப்பு வேலி என்பன தீப்பற்றி எரிந்ததுடன், பொதுமக்கள் சிலரும் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவங்கள் தொடர்பில் தீவிர கவனம் செலுத்தியுள்ள யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், நேற்று நடைபெற்ற திருவிழாவில் கலந்துகொண்ட பொதுமக்கள் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைகளில் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும், கண் பாதிப்பு உள்ளவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையின் கண் பிரிவில் உரிய சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், ஒலிபெருக்கிகளின் அதீத பயன்பாடு, வெடிகளைக் கொளுத்துதல், ஆபத்தான லேசர் (laser) ஒளிக்கீற்றுகளைப் பயன்படுத்துதல் மற்றும் யானைகளை ஊர்வலமாக அழைத்துச் செல்லுதல் போன்ற பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு நிர்வாகங்களுக்குத் தொடர்ச்சியாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும், சில ஆலய நிர்வாகங்கள் இவற்றை அலட்சியப்படுத்திச் செயற்படுவது மிகுந்த கவலையளிப்பதாக அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, மதகுருமார்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகத்தினர் உரிய சமூகப் பொறுப்புணர்வுடன் செயற்பட்டு, எதிர்காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் திருவிழாக்களை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
(Latest Uptated 9.30pm)
யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பெரியவளவு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவத்தில், அதிக செறிவுள்ள செயற்கை ஒளியின் (HID) வெளிப்பாட்டினால் ஏற்படக்கூடிய கண் பாதிப்பே ஏற்பட்டுள்ளதாக கண் வைத்திய நிபுணர் மலரவன் தனது மருத்துவ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தையடுத்து பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை இரவு 9.30 மணி நிலவரப்படி 400-ஐ நெருங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி, 385 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 400-ஐ நெருங்கியுள்ளது.