அக்குரெகொடை இரட்டைப் படுகொலை: பிரதான சந்தேகநபர் தப்பியோட உதவியவர் கைது!
அக்குரெகொடை இரட்டைப் படுகொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் போலிக் கடவுச்சீட்டைப் பெற்று வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்வதற்கு உதவிய குற்றச்சாட்டில் 45 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று புதன்கிழமை (07) இந்நப கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர், பிரதான சந்தேகநபர் போலிக் ஆவணங்களைப் பயன்படுத்தி வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்வதற்கு ஏதுவாக, தனது கைவிரலடையாளங்களை வழங்கி போலிக் கடவுச்சீட்டைத் தயாரித்துக் கொள்ள உதவி புரிந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி தலங்கம , அக்குரெகொடை பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட இரட்டைப் படுகொலைச் சம்பவம் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இச்சம்பவம் குறித்து மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.