சவுதி அரேபியாவில் இரு வங்கதேசப் பிரஜைகளுக்கு மரண தண்டனை – முன்கூட்டியே அறிவிக்கவில்லை என வங்கதேசம் குற்றச்சாட்டு!
சவுதி அரேபியாவின் மக்கா நகரில் இரு வங்கதேசப் பிரஜைகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை தொடர்பாக, தமக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை என வங்கதேச அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 14ஆம் திகதி, பள்ளிவாசல் ஒன்றிற்குள் தகாத செயலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட வங்கதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கும் பெண் ஒருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும், மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட பின்னரே தமக்கு இந்த விடயம் தெரியவந்ததாக வங்கதேச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், மரண தண்டனை தொடர்பான சட்ட நடவடிக்கைகள் மற்றும் தண்டனைகளை நிறைவேற்றுவதற்கு முன்னர் ஏன் தமக்கு அறிவிக்கப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சவுதி அரேபியாவிடம் விளக்கம் கோரியுள்ளதாக வங்கதேச வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஷமா ஒபாயத் இஸ்லாம் தெரிவித்துள்ளார். குறித்த இருவரும் செய்ததாகக் கூறப்படும் குற்றம் மற்றும் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதற்கு வழிவகுத்த சட்ட நடவடிக்கைகள் தொடர்பான விபரங்களையும் வங்கதேச அரசாங்கம் கோரியுள்ளது.
எனினும், குற்றச்சாட்டின் சரியான தன்மை குறித்து சவுதி அரேபிய அதிகாரிகள் இதுவரை பகிரங்கமாகத் தெளிவுபடுத்தவில்லை.
ஊடக அறிக்கைகளின்படி, சவுதி அரேபியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வங்கதேசப் பிரஜைகள் தொடர்பான பட்டியல் ஒன்று ஜெத்தாவில் உள்ள வங்கதேசத் துணைத் தூதரகத்துக்கு முன்னதாக வழங்கப்பட்டிருந்தது. அந்தப் பட்டியலில் குறித்த இருவரின் பெயர்களும் இடம்பெற்றிருந்த போதிலும், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை தொடர்பான விபரங்கள் குறிப்பிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஒக்டோபர் 18ஆம் திகதி டாக்காவில் உள்ள சவுதி அரேபியத் தூதுவரிடம் வங்கதேச வெளிவிவகார அமைச்சு நேரடியாக இந்த விவகாரத்தை எழுப்பியுள்ளது. சட்ட நடவடிக்கைகள் மற்றும் மரண தண்டனை நிறைவேற்றம் தொடர்பாக வங்கதேச அதிகாரிகளுக்கு ஏன் அறிவிக்கப்படவில்லை என்பது குறித்தும் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
இஸ்லாமியச் சட்டத்தின் கீழ் நீதிபதிகளின் விருப்பத்துக்கு ஏற்ப தண்டனைகளைத் தீர்மானிக்க அனுமதிக்கும் ‘தஃஸீர்’ (Ta’zir) என்ற தண்டனை முறையின் கீழ் இந்த மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சவுதி அரேபியாவில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான வங்கதேசப் பிரஜைகள் வசித்து வருவதுடன், பலர் அங்கு பணியாற்றியும் வருகின்றனர். இந்நிலையில், தமது நாட்டுப் பிரஜைகளுக்கு விதிக்கப்படும் கடுமையான தண்டனைகள் தொடர்பாக உரிய தகவல்கள் பகிரப்பட வேண்டுமென வங்கதேசத்தில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதேவேளை, இலங்கை அதிகாரிகளின் இராஜதந்திர மற்றும் சட்ட ரீதியான தலையீடுகளைத் தொடர்ந்து, சமூக ஊடகக் கருத்து ஒன்றின் காரணமாக இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை சவுதி அரேபிய உச்ச நீதிமன்றம் இரத்துச் செய்த சில நாட்களுக்குப் பின்னர் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த இரு வங்கதேசப் பிரஜைகளின் உடல்களைத் தாயகத்துக்குக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதற்கு முன்னர், சவுதி அரேபியாவிடமிருந்து விரிவான விளக்கத்தை எதிர்பார்த்துள்ளதாக வங்கதேச அரசாங்கம் தெரிவித்துள்ளது.