பாகிஸ்தானில் பாடசாலைக் கூரை இடிந்து விபத்து: 35 பேர் உயிரிழப்பு; 50க்கும் மேற்பட்டோர் காயம்
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள பெஷாவர் நகரில் தனியார் பாடசாலையொன்றின் கூரை இடிந்து விழுந்ததில் 34 சிறுவர்கள் மற்றும் ஆசிரியர் ஒருவர் உட்பட குறைந்தது 35 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் மற்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டில் இவ்வாறான சம்பவங்களில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய விபத்துகளில் ஒன்றாக இது பதிவாகியுள்ளது.
கைர் (Al-Khair) பாடசாலையில் இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த சிறுவர்கள் ஆறு முதல் 12 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், காயமடைந்தவர்களில் அதிக வயதுடையவர் 14 வயதானவர் எனவும் லேடி ரீடிங் வைத்தியசாலையின் பேச்சாளர் முஹம்மத் ஆசிம் தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர சிகிச்சை வழங்குவதற்காக வைத்தியசாலையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு வகுப்பறைகளின் கூரைகள் இடிந்து வீழ்ந்தன
கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் வியாழக்கிழமை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இரண்டாம் மற்றும் மூன்றாம் தரங்களில் கல்வி பயிலும் சிறுவர்கள் ஆசிரியர்களுடன் வகுப்பறைகளில் இருந்தபோது, இரண்டு வகுப்பறைகளின் கூரைகள் இடிந்து விழுந்ததாக அவசரகால சேவைகள் பிரிவின் பேச்சாளர் பிலால் பைஸி தெரிவித்துள்ளார்.
விபத்து தொடர்பில் தகவல் கிடைத்த ஐந்து நிமிடங்களுக்குள் அருகிலிருந்த நிலையத்திலிருந்து அம்புலன்ஸ் வண்டிகளும் அனர்த்த முகாமைத்துவப் பணியாளர்களும் சம்பவ இடத்தை வந்தடைந்துள்ளனர்.
பின்னர், சுமார் 100 மீட்புப் பணியாளர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக பைஸி குறிப்பிட்டுள்ளார். இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த அனைவரும் மீட்கப்பட்டதுடன், இடிபாடுகளை அகற்றும் பணிகளும் நிறைவடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மீட்புக் குழுவினர் விரைந்து செயற்பட்டதன் மூலம் குறைந்தது 40 பேரின் உயிர்களைக் காப்பாற்ற முடிந்ததாகவும், ஒரு டசனுக்கும் அதிகமான சிறுவர்கள் சிறிய காயங்களுக்கு உள்ளானதாகவும் அவர் கூறியுள்ளார்.
“வானமே இடிந்து விழுந்ததைப் போல் உணர்ந்தேன்”
விபத்தினால் பாதிக்கப்பட்ட ஆசிரியையான மஹ்விஷ் ஸமான், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
குறித்த பாடசாலையில் முன்பள்ளி முதல் ஐந்தாம் தரம் வரை சுமார் 1,200 மாணவர்கள் கல்வி பயின்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
கூரை இடிந்து விழுந்தபோது தாம் வகுப்பறையில் இருந்ததாகவும், அப்போது வானமே இடிந்து விழுந்ததைப் போன்று உணர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அதன் பின்னர் சுயநினைவை இழந்த தாம் வைத்தியசாலையிலேயே மீண்டும் கண்விழித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
உறவினர்களை இழந்து தவிக்கும் குடும்பங்கள்
விபத்து இடம்பெற்ற டிர் கொலனி பகுதியில் பெரும் சோகநிலை நிலவுகிறது. உயிரிழந்த பெரும்பாலான சிறுவர்கள் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களுக்காக அருகிலுள்ள ரஹ்மான் பாபா மயானத்தில் கூட்டு ஜனாஸா தொழுகை மற்றும் இறுதிக்கிரியைகளில் பங்கேற்குமாறு பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்த சிறுவர்களின் உடல்களை வீடுகளுக்குக் கொண்டு செல்ல அம்புலன்ஸ் வண்டிகள் வைத்தியசாலையிலிருந்து புறப்பட்டுச் சென்றபோது, உறவினர்கள் கதறி அழுததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து குறித்து அறிந்தவுடன் பாடசாலைக்கு விரைந்த சாமியுல்லா கான் என்ற அப்பகுதி குடியிருப்பாளர், மூன்று சிறுமிகளை மீட்க உதவியதாகத் தெரிவித்துள்ளார்.
அவரது மகனும் குறித்த பாடசாலையில் கல்வி பயில்கின்றார். வகுப்பறையிலிருந்து தண்ணீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்ததால் தனது மகன் உயிர் தப்பியதாக அவர் கூறியுள்ளார்.
மற்றொரு குடியிருப்பாளரான முஹம்மத் கான், இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்பட்ட மாணவர்களையும் பாடசாலை ஊழியர்களையும் மீட்பதற்காக மீட்புப் பணியாளர்கள் மிகவும் கவனமாக இடிபாடுகளை அகற்றியதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பாடசாலை வளாகத்திலும் அரச லேடி ரீடிங் வைத்தியசாலையிலும் பெற்றோர் தங்களது பிள்ளைகளின் நிலைமை குறித்து அறிந்துகொள்ள முடியாமல் தவித்துள்ளனர்.
பாடசாலை உரிமையாளர் கைது
இந்தச் சம்பவம் தொடர்பில் பாடசாலையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெஷாவர் பொலிஸ் பிரதானி சயீத் அஹ்மட் தெரிவித்துள்ளார்.
குறித்த கட்டடம் கட்டமைப்பு ரீதியாகப் பலவீனமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், கைது செய்யப்பட்ட பாடசாலை உரிமையாளரான முஹம்மத் கான், இந்த வாரம் பெய்த மழையால் கூரையின் உறுதித்தன்மை பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளதாகப் பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் தொடர்கின்றன.
மூன்று மாடிகளைக் கொண்ட கட்டடத்தின் கூரை இடிந்து விழுந்தமைக்கான காரணத்தை ஆராய மாகாண அரசாங்கம் விசாரணைக் குழுவொன்றையும் நியமித்துள்ளது.
கைபர் பக்துன்க்வா மாகாண ஆளுநர் பைசல் கரீம் குண்டி, இந்த அனர்த்தம் குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டதுடன், சம்பவம் தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். காயமடைந்த சிறுவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மாகாண அரசாங்கத்தின் பேச்சாளர் சமர் ஹாரூன் பிலோர், மீட்புப் பணியாளர்களின் துரித நடவடிக்கையைப் பாராட்டியதுடன், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களைப் பாதுகாப்பாக மீட்பதற்கு அரசாங்கம் தன்னிடமுள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் இந்த உயிரிழப்புகள் தொடர்பில் தனித்தனியான அறிக்கைகள் மூலம் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
“இந்தத் துயரமான தருணத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரத்தில் முழு நாடும் பங்கெடுத்துக்கொள்கிறது” என ஜனாதிபதி சர்தாரி தெரிவித்துள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இதுபோன்ற அனர்த்தங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்காகப் பாடசாலைக் கட்டடங்கள் உரிய பாதுகாப்புத் தரநிலைகளைப் பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தானில் கட்டடங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன. கட்டுமானத் தரநிலைகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படாமை, தரமற்ற பொருட்களின் பயன்பாடு மற்றும் செலவுகளைக் குறைப்பதற்காகப் பாதுகாப்பு விதிமுறைகள் புறக்கணிக்கப்படுவது ஆகியவை இத்தகைய அனர்த்தங்களுக்குக் காரணமாகக் கூறப்படுகின்றன.
இதேவேளை, கடந்த ஜூலை மாதம் லாகூரில் கட்டுமானப் பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த பயிற்சி வகுப்பு நிலையமொன்றின் கூரை இடிந்து விழுந்ததில் நான்கு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.