இம்ரான் கானுக்கு மேலும் நெருக்கடி: கைபர் பக்துன்க்வா மாகாண அரசை இடைநிறுத்தியது பாகிஸ்தான்!
சிறையில் உள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக அவரது குடும்பத்தினர் கவலை வெளியிட்டுள்ள நிலையில், அவரது அரசியல் செல்வாக்கு அதிகமுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி, அவரது கட்சியின் ஆட்சியை இடைநிறுத்தியுள்ளமை அவருக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியான கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி ஞாயிற்றுக்கிழமை அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தினார்.
இதன் மூலம், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியால் வழிநடத்தப்பட்டு வந்த மாகாண அரசின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. தீவிரவாதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதில் மாகாண அரசு தோல்வியடைந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதுடன், சர்தாரியின் கட்சியைச் சேர்ந்த அரசியல் எதிரணி உறுப்பினர் ஒருவர் நிர்வாகப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும், இந்த நடவடிக்கை தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான முயற்சி அல்ல என்றும், மாகாணத்தை அரசியல் ரீதியாகக் கைப்பற்றுவதற்கும், இம்ரான் கானின் ஆதரவாளர்கள் இஸ்லாமாபாத்தை நோக்கி முன்னெடுக்கத் திட்டமிட்டிருந்த பேரணியைத் தடுப்பதற்குமான ஒரு சாக்குப்போக்கு என்றும் PTI கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
அத்துடன், மாகாண வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகக் கிடைக்கும் வளங்களைப் பயன்படுத்துவதற்கான அதிகாரமும் கட்சியிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவசரகால நிலையை எதிர்த்து, மாகாணத் தலைநகரான பெஷாவரில் உள்ள உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை PTI கட்சி மனுத் தாக்கல் செய்துள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இம்ரான் கானின் நெருங்கிய உதவியாளர் சுல்பி புகாரி, “இம்ரான் கானின் அடிப்படை மனித உரிமைகளைத் தீவிரவாதம் போன்ற சிக்கலான பிரச்சினையுடன் ஒப்பிடுவது அபத்தமானது” எனத் தெரிவித்துள்ளார்.
இம்ரான் கானின் ஆதரவாளர்கள் கைது
அவசரகால நிலை அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, இம்ரான் கானை விடுதலை செய்ய வேண்டும் என்றும், அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி, ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஒன்றுகூடியிருந்தனர்.
அங்கிருந்து இஸ்லாமாபாத்தை நோக்கிப் பேரணியாகச் செல்லவும் அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில், பேரணிக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட சூழலில், இம்ரான் கானின் மூன்று சகோதரிகளும், கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரசியல் ஆய்வாளர் நஜாம் சேத்தி கருத்துத் தெரிவிக்கையில், தற்போதைய சூழ்நிலை இம்ரான் கானுக்கு மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
PTI கட்சி, இம்ரான் கானுக்காக அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு சலுகையையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில், கைபர் பக்துன்க்வா மாகாண அரசின் கட்டுப்பாட்டையும் இழந்துள்ளதாகவும், கட்சியின் அரசியல் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலைமை, இம்ரான் கானுக்கும் பாகிஸ்தானின் சக்திவாய்ந்த இராணுவத் தளபதி ஆசிம் முனீருக்கும் இடையிலான நீண்டகால அரசியல் மற்றும் அதிகாரப் போட்டியையும் மேலும் தீவிரப்படுத்தக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
உடல்நிலை குறித்து குடும்பத்தினர் கவலை
74 வயதான இம்ரான் கான், முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் ஆவார். 2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை பாகிஸ்தானின் பிரதமராகப் பதவி வகித்த அவர், ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 2023ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். எனினும், தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.
பல மாதங்களாக அவரைச் சந்திப்பதற்கான அனுமதிகள் மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், அவரது உடல்நிலை குறித்து குடும்பத்தினரும் கட்சியினரும் தொடர்ந்து கவலை வெளியிட்டு வருகின்றனர்.
ஒரு கண்ணின் பார்வை பாதிக்கப்பட்டுள்ளமை, இரத்த அழுத்தத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் மற்றும் தனிமைச் சிறைவாசத்தால் ஏற்படும் உளவியல் பாதிப்புகள் தொடர்பாக அவருக்கு அவசர மருத்துவ உதவி வழங்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இம்ரான் கானின் கைதுக்குப் பின்னர் 2023ஆம் ஆண்டு நாடு முழுவதும் கலவரங்கள் வெடித்ததுடன், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் PTI கட்சி நடத்திய முக்கிய போராட்டமும் உயிரிழப்புகளுடன் கூடிய மோதல்களில் முடிவடைந்திருந்தது.
அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை தோல்வி
இத்தகைய மோதல்கள் மீண்டும் இடம்பெறுவதைத் தவிர்க்கும் நோக்கில், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசாங்கம் கடந்த வாரம் PTI கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியது.
இம்ரான் கானுக்கு தனிப்பட்ட மருத்துவ உதவிகளை வழங்க அனுமதித்தல், சிறையில் அவரைச் சந்திப்பதற்கான அனுமதி வழங்குதல் மற்றும் லண்டனில் வசிக்கும் அவரது மகன்களுடன் தொலைபேசியில் உரையாடுவதற்கு வாய்ப்பளித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை PTI கட்சி முன்வைத்திருந்தது.
இதற்குப் பதிலாக, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இடம்பெறும் இஸ்லாமியத் தீவிரவாதச் செயற்பாடுகளைக் கட்சி பகிரங்கமாகக் கண்டிக்க வேண்டும் என்றும், தீவிரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்த பாதுகாப்புப் படையினரின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க வேண்டும் என்றும், அரசாங்கத்தின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அரசாங்கம் கோரியதாக பிரதி உள்துறை அமைச்சர் தலால் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
“அவர்கள் கேட்டவற்றில் கிட்டத்தட்ட அனைத்தையும் வழங்குவதற்கு நாம் தயாராக இருந்தோம். ஆனால், அரசாங்கத்தின் கோரிக்கைகளை PTI கட்சி நிராகரித்தது” என அவர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
அவசரகால நிலைக்கு எதிராக மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கை
பாகிஸ்தானில் 1975ஆம் ஆண்டுக்குப் பின்னர் மாகாணங்களில் ஐந்து தடவைகள் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் மூன்று தடவைகள் கைபர் பக்துன்க்வா மாகாணத்திலும், தலா ஒரு தடவை பஞ்சாப் மற்றும் பலூசிஸ்தான் மாகாணங்களிலும் அறிவிக்கப்பட்டன.
இந்த அனைத்து அவசரகால நிலைகளும் நீதிமன்றத் தலையீடு அல்லது அரசியல் நடவடிக்கைகள் காரணமாக சில மாதங்களுக்குள் நீக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய அவசரகால நடவடிக்கையின் சட்டபூர்வத்தன்மை குறித்தும், அதன் பின்னணியில் அரசியல் ஒடுக்குமுறைகள் இடம்பெறக்கூடும் என்பது குறித்தும் மனித உரிமை அமைப்புகளும் அரசியல் ஆய்வாளர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணைக்குழு, மத்திய அரசாங்கமும் PTI கட்சியும் அர்த்தமுள்ள அரசியல் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.