கென்யாவில் பட்டினிப் போட்டு 191 பேரைக் கொன்றதாகக் குற்றச்சாட்டு – மத போதகருக்கு இன்று தீர்ப்பு!
கென்யாவில், இயேசுவைச் சந்திக்க வேண்டும் எனக் கூறி தனது ஆதரவாளர்களைப் பட்டினி கிடக்கச் செய்து கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சுயபிரகடன மத போதகர் போல் மெக்கன்சி (Paul Mackenzie) மற்றும் அவரது கூட்டாளிகள் தொடர்பான வழக்கில், திங்கட்கிழமை (ஒக்டோபர் 19) தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
மொம்பாசா நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள இந்த வழக்கில், பெரும்பாலானோர் சிறுவர்கள் உள்ளிட்ட 191 பேரைக் கொலை செய்ததாக மெக்கன்சி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கென்யாவின் பிரபல சுற்றுலாத் தலமான மலிந்திக்கு (Malindi) அருகிலுள்ள ஷகஹோலா வனப்பகுதியில் (Shakahola Forest) 2023ஆம் ஆண்டு முதல் நூற்றுக்கணக்கான சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் உலகளாவிய கவனத்தைப் பெற்றது. இது ‘ஷகஹோலா வனப் படுகொலை’ என அழைக்கப்படுகிறது.
இயேசுவைச் சந்திக்க பட்டினி கிடக்குமாறு போதனை
தனது ஆதரவாளர்களைத் தீவிர உண்ணாவிரதத்தில் ஈடுபடத் தூண்டி, அதன் மூலம் அவர்கள் உயிரிழக்க வேண்டும் என மெக்கன்சி வலியுறுத்தியதாகக் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு, 191 கொலைக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் மெக்கன்சியும் அவரது கூட்டாளிகளும் தாங்கள் குற்றமற்றவர்கள் எனத் தெரிவித்திருந்தனர். இதற்கு மேலதிகமாக, மனிதப் படுகொலை மற்றும் பயங்கரவாதம் தொடர்பான தனித்தனி வழக்குகளிலும் அவர் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின்போது சிறுவர்கள், பெண்கள் மற்றும் ஆண்களின் மேலும் பல சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 400ஐக் கடந்துள்ளது.
திங்கட்கிழமை மொம்பாசா நீதிமன்றத்திற்கு மெக்கன்சி அழைத்துவரப்பட்டபோது, அவர் எந்தவித உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அவருடன் மேலும் 29 குற்றஞ்சாட்டப்பட்டவர்களும் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.
உயிரிழந்தவர்களின் உறவினர்களும் தீர்ப்பைக் கேட்பதற்காக நீதிமன்றத்தில் திரண்டிருந்தனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் உயிரிழப்பு
இந்தச் சம்பவத்தில் தனது மகள் மற்றும் இரண்டு பேரக்குழந்தைகள் உள்ளிட்ட எட்டு குடும்ப உறுப்பினர்களை இழந்த 62 வயதான பிரான்சிஸ் வான்ஜே (Francis Wanje), தீர்ப்பு தமக்கு மிகவும் முக்கியமான நாள் எனத் தெரிவித்துள்ளார்.
“இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில், ஒட்டுமொத்த மக்களுக்கும் பாடமாக அமையும் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமை குறித்தும் அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கென்யாவில் மத அமைப்புகளின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களை மேலும் கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன. மெக்கன்சி இதற்கு முன்னரும் இருமுறை கைது செய்யப்பட்ட போதிலும் விடுவிக்கப்பட்டிருந்தமை இதற்குக் காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.
திட்டமிட்ட மரண வரிசை குறித்து குற்றச்சாட்டு
ஷகஹோலா வனப்பகுதியில் அமைந்துள்ள சுமார் 800 ஏக்கர் பரப்பளவிலான தனது பண்ணையில், தீவிர உண்ணாவிரதத்தை மெக்கன்சி திட்டமிட்டு வழிநடத்தியதாக அரச தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
அங்கு மரணங்களை ஒழுங்குபடுத்தும் கட்டமைப்பு ஒன்று செயல்பட்டதாகவும், அதன் அடிப்படையில் முதலில் சிறுவர்களும், பின்னர் பதின்ம வயதினரும், பெண்களும், இறுதியாக ஆண்களும் உயிரிழக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதாகவும் அரச தரப்பு தெரிவித்துள்ளது.
பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் மற்றும் பொலிஸ் விசாரணைத் தகவல்களின் அடிப்படையில், பெரும்பாலான சிறுவர்கள் பட்டினியால் உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், மூச்சுத்திணறல், கழுத்து நெரிக்கப்பட்டமை மற்றும் தலையில் ஏற்பட்ட கடுமையான காயங்கள் உள்ளிட்ட காரணங்களாலும் சிலர் உயிரிழந்ததாக வழக்குத் தரப்பு தெரிவித்துள்ளது.
எனினும், மெக்கன்சியின் சட்டத்தரணிகள் இந்த வழக்கில் முன்வைக்கப்பட்டுள்ள சாட்சியங்கள் பெருமளவில் மறைமுக ஆதாரங்கள், உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் மற்றும் தீர்க்கமான முடிவுகளை வழங்காத தடயவியல் அறிக்கைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை என வாதிட்டுள்ளனர்.
400ஐக் கடந்த உயிரிழப்புகள்
2023 ஏப்ரல் மாதத்தில், மனித உரிமைகள் அமைப்பொன்று வழங்கிய தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டதைத் தொடர்ந்து மெக்கன்சி கைது செய்யப்பட்டார். இதன்போது அவரது ஆதரவாளர்கள் சிலர் மீட்கப்பட்டனர்.
தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் நடவடிக்கைகளின்போது, வனப்பகுதியில் பல நூற்றுக்கணக்கான ஆழமற்ற கூட்டுப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. சடலங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், உள்ளூர் பிரேத அறைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து அகழ்வுப் பணிகளும் இடைநிறுத்தப்பட்டன.
கென்யாவின் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு 2024ஆம் ஆண்டு வெளியிட்ட தகவலின்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 429 ஆக இருந்தது. உயிரிழந்தவர்களில் சிலர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
மேலும், அருகிலுள்ள கிராமமொன்றில் கண்டெடுக்கப்பட்ட 52 சடலங்கள் தொடர்பாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் மெக்கன்சி மீது கூடுதல் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.
ஏற்கெனவே பலமுறை கைது செய்யப்பட்டவர்
மெக்கன்சி 2003ஆம் ஆண்டு ‘குட் நியூஸ் இன்டர்நெஷனல்’ (Good News International) என்ற தேவாலயத்தை நிறுவினார். பின்னர் நைரோபி மற்றும் கென்யாவின் கடலோரப் பகுதிகளில் அதன் கிளைகளை அமைத்ததுடன், ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களையும் ஈர்த்தார். எனினும், அந்த தேவாலயம் 2019ஆம் ஆண்டிலேயே மூடப்பட்டதாக அவர் கூறியிருந்தார்.
2017ஆம் ஆண்டு தீவிரவாதச் சிந்தனைகளைப் பரப்பியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட அவர், பின்னர் அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். 2019ஆம் ஆண்டு ஷகஹோலா பகுதியில் இரண்டு சிறுவர்களின் மரணங்கள் தொடர்பாக மீண்டும் கைது செய்யப்பட்ட போதிலும், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், 191 பேரின் மரணங்கள் தொடர்பான வழக்கில் வழங்கப்படவுள்ள தீர்ப்பு, கென்யாவில் மத அமைப்புகளின் கட்டுப்பாடு மற்றும் மத போதகர்களின் பொறுப்புக்கூறல் தொடர்பான விவாதங்களில் முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.