இங்கிலாந்தில் பேருந்துகளில் அதிக சத்தத்துடன் இசை ஒலிபரப்பினால் £100 அபராதம்!
இங்கிலாந்தில் பொதுப் போக்குவரத்துகளில் ஒழுங்கீனமான நடத்தைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பேருந்துகளில் அதிக சத்தத்துடன் இசை ஒலிபரப்பும் பயணிகளுக்கு 100 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கும் நடவடிக்கையை பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
பொதுப் போக்குவரத்துகளில் அதிக சத்தத்துடன் இசை அல்லது ஒலிப்பதிவுகளை ஒலிபரப்புதல், குப்பைகளைக் கொட்டுதல், மின்னணுப் புகையிலைச் சாதனங்களைப் பயன்படுத்துதல் மற்றும் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்ளுதல் போன்ற பிரச்சினைகளைக் கட்டுப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
இதற்கமைய, இங்கிலாந்தில் உள்ள உள்ளூராட்சி அமைப்புகளுக்கு விதிமீறலில் ஈடுபடும் பேருந்துப் பயணிகளுக்கு அபராதம் விதிக்கும் அதிகாரத்தை வழங்குவதற்கான புதிய வழிகாட்டுதல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எனினும், இந்த நடவடிக்கைகள் நடைமுறைக்கு வருவதற்கு போக்குவரத்துத் துறைச் செயலாளரின் இறுதி ஒப்புதல் அவசியமாகும்.
மேலும், பேருந்துகளில் விதிமுறைகளை மீறுபவர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்குப் போக்குவரத்துப் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பேருந்து சாரதிகளுக்கு இந்த அமலாக்கப் பொறுப்பு வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ரயில் பயணங்களின்போது அதிக சத்தத்துடன் இசை ஒலிபரப்புதல் மற்றும் பாடுதல் தொடர்பான நடைமுறையிலுள்ள சட்டங்கள் குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில், “பயணப் பெட்டியைப் பகிருங்கள்; சத்தத்தை அல்ல” (Share the carriage, not the noise) என்ற தேசிய விழிப்புணர்வுப் பிரசாரத்தையும் பிரித்தானிய அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது.
ரயில்களில் அதிக சத்தத்துடன் இசை ஒலிபரப்பும் விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு 1,000 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்படலாம். அத்துடன், விதிமுறைகளை மீறும் பயணிகள் ரயிலிலிருந்து வெளியேற்றப்படவும் முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்துகளில் அதிக சத்தத்துடன் இசை ஒலிபரப்புவது குறித்து பயணிகள் மத்தியில் பரவலான அதிருப்தி நிலவுவதாகப் பிரசாரங்களும் கருத்துக் கணிப்புகளும் சுட்டிக்காட்டுகின்றன.
எனினும், புதிய விதிமுறைகள் நடைமுறையில் எவ்வாறு அமல்படுத்தப்படும், விதிமீறல்களைக் கண்காணிப்பதில் அதிகாரிகள் எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் என்ன என்பது தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளன.