பாகிஸ்தானில் பாடசாலை கூரை இடிந்து 35 பேர் உயிரிழப்பு – தனியார் பாடசாலைகளில் அவசரப் பரிசோதனைக்கு உத்தரவு
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பாடசாலைக் கூரை இடிந்து வீழ்ந்ததில் 34 மாணவர்களும் ஆசிரியர் ஒருவரும் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மாகாணத்திலுள்ள அனைத்து தனியார் பாடசாலைகளின் கட்டடங்களையும் அவசரமாகப் பரிசோதிக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இடிந்து விழுந்த கட்டடத்தின் உறுதித்தன்மை குறித்து ஏற்கனவே பாடசாலை நிர்வாகத்திடம் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டதாக உயிரிழந்த மாணவர்களின் உறவினர்கள் கூறியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நீதியை நிலைநாட்டுமாறும் கோரிக்கை விடுத்துள்ளன.
வியாழக்கிழமை பெஷாவரின் டிர் காலனி பகுதியில் அமைந்துள்ள அல்-கைர் பாடசாலையின் கூரை இடிந்து விழுந்ததில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டன.
சம்பவம் தொடர்பில் பாடசாலையின் உரிமையாளரான மொஹம்மத் கான் வியாழக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டடம் கட்டமைப்பு ரீதியாகப் பலவீனமாக இருந்ததாகவும், அண்மையில் பெய்த மழையால் கூரையின் உறுதித்தன்மை மேலும் பாதிக்கப்பட்டதாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாக பெஷாவர் பொலிஸ் தலைவர் சயீத் அஹமட் கூறியுள்ளார்.
சம்பவத்தைத் தொடர்ந்து பாடசாலைக் கட்டடம் அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளதுடன், வெள்ளிக்கிழமை விசாரணைக் குழுவினர் அங்கு சென்று ஆய்வுகளை மேற்கொள்ளவிருந்தனர்.
மூன்று நாட்களுக்குள் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
கைபர் பக்துன்க்வா மாகாணத்திலுள்ள அனைத்து தனியார் பாடசாலைக் கட்டடங்களையும் பரிசோதித்து, மூன்று நாட்களுக்குள் அறிக்கைகளையும் பரிந்துரைகளையும் சமர்ப்பிக்குமாறு மாகாணக் கல்வித் திணைக்களத்துக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இதற்காக மாவட்ட மட்டத்தில் விசேட குழுக்களை அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சொந்தக் கட்டடங்களில் இயங்கும் பாடசாலைகள் மட்டுமன்றி, வாடகைக் கட்டடங்களில் இயங்கும் பாடசாலைகளும் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளன.
கூரைகள், மேற்கூரைகள், சுவர்கள், தூண்கள், விட்டங்கள், அத்திவாரங்கள் மற்றும் படிக்கட்டுகள் உள்ளிட்ட கட்டடத்தின் முக்கிய பகுதிகளை ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கட்டடங்கள் பாதுகாப்பானவை, பழுதுபார்ப்பு அல்லது மேம்பாடுகள் தேவைப்படுபவை, ஆபத்தானவை என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் அவசர தொழில்நுட்ப மதிப்பீடுகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
குழந்தைகளின் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் தொடர்பில் கவலை தெரிவித்த மாகாண அரசாங்கப் பேச்சாளர் சமர் ஹாரூன் பிலோர், கட்டமைப்பு ரீதியாகப் பலவீனமான கட்டடங்களில் இயங்கும் பாடசாலைகள் குறித்த தகவல்களை அரசாங்கத்துக்கு வழங்குமாறு பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறான துயரச் சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் இடம்பெறுவதைத் தடுப்பதற்காகப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இடிபாடுகளுக்குள் இருந்து 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீட்பு
சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலைத் தொடர்ந்து ஐந்து நிமிடங்களுக்குள் அவசர மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்தைச் சென்றடைந்துள்ளனர். வியாழக்கிழமை மீட்புப் பணிகள் நிறைவடையும் போது இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த அனைவரும் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இடிபாடுகளுக்குள் இருந்து குறைந்தது 40 மாணவர்கள் உயிருடன் மீட்கப்பட்டதாக பெஷாவர் அவசர சேவைகள் பிரிவின் பேச்சாளர் பிலால் பைஸி தெரிவித்துள்ளார்.
மண் மற்றும் செங்கற்களால் பாரம்பரிய முறையில் அமைக்கப்பட்டிருந்த கூரை இடிந்து விழுந்ததில், இடிபாடுகளுக்குள் சிக்கிய சில மாணவர்கள் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஆசிரியையான மஹ்விஷ் ஸமான், இந்தச் சம்பவம் எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீரென இடம்பெற்றதாகக் கூறியுள்ளார்.
தாம் வகுப்பறையில் இருந்தபோது மேல்தளத்திலிருந்து பலத்த சத்தம் கேட்டதாகவும், மாணவர்களைப் பாதுகாப்பான இடத்துக்கு ஓடுமாறு எச்சரிப்பதற்குள் கூரை இடிந்து விழுந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். பின்னர் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், தனது மாணவர்களில் பலர் உயிரிழந்ததைப் பின்னரே அறிந்துகொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மழைநீர் கசிவு குறித்து ஏற்கனவே முறைப்பாடு
உயிரிழந்த மாணவர்களின் உறவினர்கள், பாடசாலைக் கட்டடத்தின் மோசமான நிலை குறித்து ஏற்கனவே நிர்வாகத்திடம் முறைப்பாடு செய்ததாகத் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் தனது இரண்டு மருமகன்களை இழந்த 36 வயதான மொஹம்மத் ஸமான், வகுப்பறைகளுக்குள் மழைநீர் தொடர்ச்சியாகக் கசிந்ததாகவும், இது பெரும் விபத்துக்கு வழிவகுக்கக்கூடும் எனப் பாடசாலை உரிமையாளரிடம் தாம் எச்சரித்ததாகவும் கூறியுள்ளார்.
உயிரிழந்த அப்துல், 9, இரண்டாம் தரத்திலும், அபூஸர், 10, மூன்றாம் தரத்திலும் கல்வி கற்று வந்தனர். அபூஸரின் சகோதரியான சமியா, பாடசாலையின் முன்பள்ளிப் பிரிவில் கல்வி கற்று வந்த நிலையில், இனிப்பு வாங்குவதற்காக வெளியில் சென்றிருந்ததால் உயிர் தப்பியுள்ளார்.
மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த ஸாகிர் உல்லாஹ் தனது இரண்டு மகன்களான அபூபக்கர் மற்றும் மொஹம்மத் ஆகியோரை இந்தச் சம்பவத்தில் இழந்துள்ளார். இருவரும் ஒரே வகுப்பறையில் கல்வி கற்று வந்தனர்.
வேறொரு வகுப்பில் இருந்த அவரது மகள், கூரை இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து வீட்டுக்கு ஓடிச் சென்று குடும்பத்தினருக்குத் தகவல் வழங்கியுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த குடும்பத்தினர், தமது மகன்களின் வகுப்பறை இடிபாடுகளுக்குள் புதைந்திருப்பதைக் கண்டதாக ஸாகிர் உல்லாஹ் தெரிவித்துள்ளார்.
கட்டடம் பலவீனமாக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், இத்தகைய கட்டடத்தில் பாடசாலை நடத்துவதற்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் உட்படப் பொறுப்புக்கூற வேண்டிய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் தொடரும் கட்டடப் பாதுகாப்புக் கவலை
பாகிஸ்தானில் பாடசாலைக் கட்டடங்களின் பாதுகாப்பு தொடர்பான கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், கடந்த ஜூன் மாதம் கிழக்கு நகரமான லாகூரில் கட்டுமானப் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த பயிற்சி நிலையமொன்றின் கூரை இடிந்து விழுந்ததில் 14 குழந்தைகள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பெஷாவரில் இடம்பெற்றுள்ள இந்தச் சமீபத்திய துயரச் சம்பவம், கல்வி நிறுவனங்களின் கட்டடப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.