மாலியில் ஐ.எஸ். ஆதரவு ஆயுதக் குழு தாக்குதல்: 48 பேர் பலி
மாலியின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மெனாகா (Ménaka) பிராந்தியத்தில், ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதலில் 48 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் சிறுவர்களும் முதியவர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை அதிகாலை வரை இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாக, மாலியின் தேசிய இடைக்கால சபை உறுப்பினரும் துவாரெக் சமூகத் தலைவருமான மூசா அக் அச்சரதூமானே, அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
சஹேல் மாகாண இஸ்லாமிய அரசு (Islamic State in Sahel Province – ISSP) என அழைக்கப்படும் ஆயுதக் குழுவினரே இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
மாலிய இராணுவம் குறித்த ஆயுதக் குழுவினரின் நிலைகளைக் குறிவைத்து ஆளில்லா விமானத் தாக்குதல்களை முன்னெடுத்து வந்துள்ளது. இதன்போது, தமது நிலைகள் குறித்த தகவல்களை மாலிய இராணுவத்துக்கு பொதுமக்கள் வழங்கியதாகக் குற்றஞ்சாட்டியே ஆயுதக் குழுவினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக மூசா அக் அச்சரதூமானே தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ். ஆதரவு ஆயுதக் குழுவினர் பெரும்பாலும் மெனாகா பிராந்தியத்தில் இயங்கி வருகின்றனர். அத்துடன், புர்கினா பாசோ மற்றும் நைஜர் ஆகிய நாடுகளிலும் அவர்களது நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை, மெனாகா பிராந்தியத்தில் மற்றொரு ஆயுதக் குழுவான ஜமாஅத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வல் முஸ்லிமீன் (JNIM) அமைப்புடனும் ஐ.எஸ். ஆதரவு குழுவினர் கடும் போட்டியை எதிர்கொண்டு வருகின்றனர்.
மாலி உள்ளிட்ட சஹேல் பிராந்திய நாடுகளில் ஆயுதக் குழுக்களின் தாக்குதல்கள் மற்றும் பொதுமக்கள் மீதான வன்முறைகள் பாதுகாப்பு நிலைமையைத் தொடர்ந்து மோசமடையச் செய்து வருகின்றன.