சமூக வலைத்தளங்களில் வெளியாகும் பொலிஸ் சீருடை வடிவமைப்புகள் குறித்து அமைச்சர் விளக்கம்!
இலங்கைப் பொலிஸாருக்கான புதிய சீருடை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வரும் வடிவமைப்புகள் குறித்து அரசாங்கம் இதுவரை எந்தவிதமான கலந்துரையாடல்களையும் நடத்தவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அரலகங்வில பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், தற்போதைய பொலிஸ் சீருடையில் மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.
எனினும், சமூக வலைத்தளங்களில் பரவி வரும் புதிய சீருடை வடிவமைப்புகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை பரிசீலிக்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
பொலிஸ் சீருடையை மாற்றுவது மட்டுமே அரசாங்கத்தின் நோக்கமல்ல எனக் குறிப்பிட்ட அமைச்சர், பொலிஸ் சேவையில் அர்த்தமுள்ள சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
ஒரு பொலிஸ் உத்தியோகத்தரின் சீருடையை மாற்றுவதன் மூலம் அவரது நடத்தை அல்லது பொலிஸ் கடமைகளை முன்னெடுக்கும் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும் எனக் கருத முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சமாதானத்தைப் பாதுகாப்பதுடன், பொதுமக்களுடன் நெருக்கமான உறவைப் பேணக்கூடிய பொலிஸ் சேவையொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.
மேலும், போதிய அறிவு, திறமை மற்றும் தகைமைகளைக் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை உருவாக்குவதுடன், குறிப்பாக விசாரணைப் பிரிவில் பணியாற்றும் அதிகாரிகளின் தொழில்முறைத் திறன்களை மேம்படுத்துவதும் அவசியம் எனத் தெரிவித்தார்.
தற்போதைய பொலிஸ் கட்டமைப்பை புதிய சீருடையுடன் தொடர்ந்து முன்னெடுப்பதை விட, மேம்படுத்தப்பட்ட புதிய பொலிஸ் சேவையொன்றை உருவாக்குவதே நாட்டின் தேவையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரலகங்வில பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சிகளை நிறைவு செய்த 295 பொலிஸ் பயிலுநர்கள் சேவையில் இணையும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.