ஹிக்கடுவை கடற்கரையில் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட ஜேர்மனிய பெண் சுற்றுலாப் பயணி மீட்பு
ஹிக்கடுவை, திரானகம கடற்கரையில் கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது கடல் நீரோட்டத்தில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட 64 வயதுடைய ஜேர்மனிய பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று (22) மாலை குறித்த பெண் கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட பலத்த கடல் நீரோட்டத்தில் சிக்கி கரையிலிருந்து தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது கடற்கரையில் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் உடனடியாகச் செயற்பட்டு குறித்த பெண்ணை மீட்டுள்ளனர்.
இந்த மீட்புப் பணியில் பொலிஸ் சார்ஜன்ட் திஸாநாயக்க (38508), பொலிஸ் கான்ஸ்டபிள் மிஹிந்து (83255) மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் நிபுன் (98864) ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட பெண்ணுக்கு ஆரம்பக்கட்ட முதலுதவி வழங்கப்பட்ட பின்னர், அவர் பாதுகாப்பாக உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.