யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே குழு மோதல்: 5 பேர் காயம் – 21 பேர் விளக்கமறியலில்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற குழு மோதலில் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளதுடன், 21 மாணவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மோதல், திருநெல்வேலி பகுதியில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது.
இதன்போது மாணவர்கள் வீதியில் குழுக்களாகப் பிரிந்து கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது மாணவர் ஒருவர் பிளேடினால் இரு மாணவர்களை வெட்டிக் காயப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் வெட்டுக் காயங்களுக்கு உள்ளான இருவர் உள்ளிட்ட ஐந்து மாணவர்கள் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிஸார், பிளேடினால் தாக்குதல் நடத்திய மாணவர் உள்ளிட்ட 21 மாணவர்களைக் கைது செய்துள்ளனர்.
பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் வீதியில் குழுக்களாக மோதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 21 மாணவர்களும் நேற்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, அவர்களை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, மோதலில் ஈடுபட்ட ஏனைய மாணவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.