வாகனக் கடன் மற்றும் குத்தகை வசதிகளுக்கு இலங்கை மத்திய வங்கி புதிய கட்டுப்பாடுகள்
வாகனக் கடன்கள் மற்றும் குத்தகை (Leasing) வசதிகளை வழங்கும்போது வாகனங்களின் பெறுமதியை மதிப்பிடுவதற்கான புதிய கடுமையான விதிமுறைகளை இலங்கை மத்திய வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கடன்-பெறுமதி விகித (Loan-to-Value – LTV) கட்டுப்பாடுகளை மீறி அதிகளவிலான கடன்களை வழங்குவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் 2026ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் திகதி வெளியிடப்பட்ட மத்திய வங்கியின் 03ஆம் இலக்க 2026ஆம் ஆண்டு பணிப்புரையின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், நவம்பர் 10ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
உரிமம் பெற்ற வங்கிகள், உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட நிதி குத்தகை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இந்தப் புதிய விதிமுறைகள் பொருந்தும்.
இதன்படி, புதிதாக இறக்குமதி செய்யப்பட்டு இதுவரை பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கான பெறுமதி, அங்கீகரிக்கப்பட்ட முகவரால் வழங்கப்படும் வரி விலைப்பட்டியலில் (Tax Invoice) குறிப்பிடப்பட்டுள்ள இறுதிச் செலுத்த வேண்டிய தொகையின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும்.
அதேபோன்று, மீள்புதுப்பிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்டு இதுவரை பதிவு செய்யப்படாத வாகனங்களின் பெறுமதி, விற்பனையாளரின் வரி விலைப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இறுதித் தொகை அல்லது சுங்க அனுமதியின்போது கணக்கிடப்பட்ட பெறுமதி ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும்.
ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் பெறுமதி, தொழில்முறை மதிப்பீட்டாளரின் ஊடாக மதிப்பிடப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கப்பட்ட வாகன மதிப்பீடுகளைத் தடுக்க நடவடிக்கை
வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற நாணயக் கொள்கை மீளாய்வு தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கலாநிதி சி. அமரசேகர, சில வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் நடைமுறையிலுள்ள LTV கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதற்காக பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டமை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்தப் புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
குறிப்பாக, வாகனங்களின் மதிப்பீடுகளை மாற்றியமைப்பதன் மூலம் அனுமதிக்கப்பட்ட வரம்பை விட அதிகளவிலான கடன்களை வழங்குவதற்கு சில நிதி நிறுவனங்கள் முயற்சித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
புதிய விதிமுறைகளில் மிக முக்கியமான மாற்றமாக, புத்தம் புதிய வாகனங்களுக்கான கடன் தொகையைத் தீர்மானிக்கும்போது அங்கீகரிக்கப்பட்ட முகவரின் வரி விலைப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பெறுமதியையே அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், சில நிதி நிறுவனங்கள் வாகனங்களின் பெறுமதியை செயற்கையாக அதிகரித்துக் காட்டி, அதிகளவிலான கடன்களை வழங்குவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
இத்தகைய நடைமுறைகள் கடன் பெறுபவர்களுக்கும் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கும் நிதி ரீதியான ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் எச்சரித்தார்.
வாகனங்களின் உண்மையான சந்தைப் பெறுமதியை விட அதிக பெறுமதியைக் காட்டி, அதிகளவிலான கடன்களைப் பெற்றுக்கொள்வதைத் தடுப்பதே இந்த நடவடிக்கைகளின் முக்கிய நோக்கம் என்றும் அவர் விளக்கமளித்தார்.
வாகன மதிப்பீடுகளுக்கு மேலதிக கட்டுப்பாடுகள்
புதிய பணிப்புரையின்படி, வாகனக் கடன் மற்றும் குத்தகை வசதிகளை வழங்கும்போது மேற்கொள்ளப்படும் மதிப்பீடுகள் உண்மையான மற்றும் நியாயமான சந்தைப் பெறுமதியைப் பிரதிபலிப்பதை நிதி நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும், நியாயமான காலப்பகுதிக்குள் அதே வகை மற்றும் தரத்தைச் சேர்ந்த வாகனங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட முந்தைய மதிப்பீடுகளை விட தற்போதைய மதிப்பீடு குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருக்கக்கூடாது எனவும் மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.
வாகனங்களின் பெறுமதியை செயற்கையாக அதிகரித்துக் காட்டி, அதன் மூலம் அதிக கடன் தொகைகளைப் பெற்றுக்கொள்வதைத் தடுப்பதே இந்தக் கட்டுப்பாட்டின் நோக்கமாகும்.
இத்தகைய முறைகேடுகள் தொடர்ந்தால், ஏனைய கடன் வழங்கல் பிரிவுகளிலும் இதேபோன்ற நடவடிக்கைகள் பரிசீலிக்கப்படலாம் என மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்தப் புதிய திருத்தங்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள LTV விகிதங்களில் மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. மாறாக, வாகனங்களின் பெறுமதியைத் தீர்மானிப்பதற்கான நடைமுறைகளையே மேலும் கடுமையாக்கியுள்ளன.
இதன் காரணமாக, குறிப்பாகப் புத்தம் புதிய மற்றும் மீள்புதுப்பிக்கப்பட்ட வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கான கடன் மற்றும் குத்தகை வசதிகளைப் பெறும்போது, வரி விலைப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பெறுமதி முக்கிய அடிப்படையாக அமையவுள்ளது.