புதிய களனி பாலத்தின் நுழைவு, வெளியேறும் பாதைகள் தற்காலிகமாக மூடப்படுகின்றன
புதிய களனி பாலத்தையும் துறைமுக அணுகல் உயர்மட்ட வீதியையும் இணைக்கும் கட்டுமானப் பணிகள் காரணமாக, புதிய களனி பாலத்தின் சில நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகள் இன்று (23) முதல் டிசம்பர் 1ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படவுள்ளன.
வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இக்காலப்பகுதியில் இங்குருகடை சந்திப்பின் நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகள் வெவ்வேறு நேரங்களில் மூடப்படவுள்ளன.
இதன்படி, இன்று (23) இரவு 9.00 மணி முதல் நவம்பர் 25ஆம் திகதி அதிகாலை 5.00 மணி வரை இரு பாதைகளும் மூடப்படும்.
நவம்பர் 25ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை, தினமும் இரவு 9.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 5.00 மணி வரை வெளியேறும் பாதை மாத்திரம் மூடப்படும்.
அத்துடன், நவம்பர் 28ஆம் திகதி இரவு 9.00 மணி முதல் டிசம்பர் 1ஆம் திகதி அதிகாலை 5.00 மணி வரை மீண்டும் இரு பாதைகளும் மூடப்படவுள்ளன.
இந்தத் தற்காலிக மூடல் காரணமாக, கட்டுநாயக்க மற்றும் ஒருகொடவத்தை பகுதிகளிலிருந்து கொழும்புத் துறைமுகம் மற்றும் இங்குருகடை சந்திப்பு நோக்கிப் பயணிக்கும் வாகனங்களும், கொழும்புத் துறைமுகம் மற்றும் இங்குருகடை சந்திப்பிலிருந்து கட்டுநாயக்க மற்றும் பொரளை நோக்கிப் பயணிக்கும் வாகனங்களும் பாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கட்டுநாயக்க அல்லது கண்டியிலிருந்து கொழும்புத் துறைமுகம் மற்றும் இங்குருகடை சந்திப்பு நோக்கிப் பயணிப்போர் பேலியகொடை அல்லது ஒருகொடவத்தை வெளியேறும் பாதைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஒருகொடவத்தையிலிருந்து கொழும்புத் துறைமுகம் நோக்கிப் பயணிக்கும் வாகனங்கள் புதிய களனி பாலத்தின் கீழ்மட்ட வீதியைப் பயன்படுத்த வேண்டும்.
அதேவேளை, கொழும்புத் துறைமுகம் அல்லது இங்குருகடை சந்திப்பிலிருந்து கட்டுநாயக்க நோக்கிப் பயணிப்போர் புதிய களனி பாலத்தின் கீழ்மட்ட வீதியைப் பயன்படுத்தி, பேலியகொடை நுழைவாயில் ஊடாக அதிவேக நெடுஞ்சாலைக்குள் பிரவேசிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்புத் துறைமுகம் அல்லது இங்குருகடை சந்திப்பிலிருந்து பொரளை நோக்கிப் பயணிக்கும் வாகனங்களும் புதிய களனி பாலத்தின் கீழ்மட்ட வீதியைப் பயன்படுத்த வேண்டும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கட்டுமானப் பணிகள் நிறைவடையும் வரை சாரதிகள் அறிவிக்கப்பட்ட மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும், இதனால் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களுக்கு வருந்துவதாகவும் அதிகார சபை தெரிவித்துள்ளது.