2027 ஜனவரியில் அரச ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மூன்றாம் கட்ட சம்பள அதிகரிப்பு – பிரதமர் அறிவிப்பு
அரச ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்பின் மூன்றாம் கட்டம் 2027 ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அறிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் சனிக்கிழமை (21) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அடிப்படைச் சம்பள அதிகரிப்புத் திட்டத்தின் முதல் இரண்டு கட்டங்கள் முறையே 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும், அதன் மூன்றாம் கட்டம் எதிர்வரும் ஜனவரியில் அமுல்படுத்தப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், நிலவும் சம்பளம் மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஆணைக்குழு, 2027 ஜூலை மாதத்தில் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
குறித்த அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய சம்பளம் மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.
மேலும், அரசாங்கத்தின் ஏனைய செயற்பாடுகள் தொடர்பிலும் அவர் பல்வேறு தகவல்களை வெளியிட்டார்.
இதன்படி, ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் இணையவழி முறைமை ஊடாகப் பரவலாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் மூலம் நன்மையடைந்தவர்களின் எண்ணிக்கை 2025ஆம் ஆண்டில் 1,664 ஆகக் காணப்பட்ட நிலையில், 2026ஆம் ஆண்டில் 27,948 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜனாதிபதி நிதியத்தின் நிதி வலிமை 150 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் 100 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், பாடசாலை மாணவர்களுக்கான 'சுரக்ஷா' காப்புறுதித் திட்டம் விரிவுபடுத்தப்பட்ட நன்மைகள் மற்றும் மருத்துவக் காப்பீட்டு வசதிகளுடன் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
மேலும், பல்கலைக்கழக மாணவர்களுக்கு சுமார் 2,000 மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, நாடாளுமன்ற சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தனிநபர்கள் தொடர்பில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்புவதாகப் பிரதமர் விமர்சித்தார்.
ஆக்கபூர்வமானதும் மரியாதைக்குரியதுமான விமர்சனங்களை அரசாங்கம் வரவேற்பதாகக் குறிப்பிட்ட அவர், எதிர்க்கட்சியினர் பொறுப்புடனும் கண்ணியத்துடனும் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.