யோஷித ராஜபக்ஷ, முன்னாள் கடற்படைத் தளபதி ஊழல் குற்றச்சாட்டுகளை நிராகரித்தனர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோர் தங்களுக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளனர்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, இன்று (23) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் இரு பிரதிவாதிகளுக்கும் நீதிமன்றத்தில் வாசித்துக் காட்டப்பட்டன.
இதன்போது, இருவரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவித்தனர். இதனையடுத்து, வழக்கின் சாட்சியங்கள் மீதான விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.
தொடர்ந்து, மேலதிக சாட்சிய விசாரணையை எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
2006ஆம் ஆண்டு யோஷித ராஜபக்ஷவுக்குத் தேவையான தகுதிகள் இல்லாத போதிலும், பிரித்தானியாவில் உள்ள ரோயல் கடற்படைப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெறுவதற்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த பயிற்சித் திட்டத்துடன் தொடர்புடைய ஊழல் குற்றத்தைப் புரிந்ததாகவும், அந்தக் குற்றத்திற்குத் துணைபோனதாகவும் வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.