இம்ரான் கான் தொடர்பான விவாதத்தைத் தடுத்தமைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி
முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொடர்பான பிரேரணை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (21) உரையாற்றிய அவர், நாடாளுமன்றத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்து கேள்வி எழுப்புவதற்கும், விளக்கம் கோருவதற்கும் எதிர்க்கட்சிக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் குறித்து தனது அதிருப்தியை வெளியிட்டார்.
முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொடர்பாக ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையொன்றை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா சமர்ப்பித்திருந்ததாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எனினும், குறித்த விவகாரம் இலங்கை - பாகிஸ்தான் இராஜதந்திர உறவுகளைப் பாதிக்கக்கூடும் என்ற காரணத்தினால் அந்தப் பிரேரணை நிராகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகர் தனது கருத்தைக் கோரியதாகவும், அதற்கு முன்னரே நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேராவுடன் தாம் இது குறித்து கலந்துரையாடியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அரசியல் இலாபம் கருதி இலங்கைக்கும் ஏனைய நாடுகளுக்கும் இடையில் தேவையற்ற இராஜதந்திர முரண்பாடுகளை ஏற்படுத்தும் நோக்கம் தமது கட்சிக்கு இல்லை என்றும் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
எனினும், குறித்த விவாதத்தை நிராகரித்தமைக்கான காரணம் தொடர்பில் விளக்கம் கோருவதற்குக்கூட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது என அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், பாகிஸ்தான் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள விவகாரங்கள் குறித்து நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் விவாதிக்க முடியாது என பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்த கருத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் வெவ்வேறு அணுகுமுறைகளைக் கடைப்பிடிப்பதாகக் குற்றஞ்சாட்டிய அவர், முக்கியமான விடயங்களை எழுப்பும்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ச்சியாகத் தடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய சஜித் பிரேமதாச, அரசாங்கத்தின் தீர்மானங்கள் குறித்து கேள்வி எழுப்புவதற்கான எதிர்க்கட்சியின் உரிமையை நாடாளுமன்றம் பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.