ரூ. 5 இலட்சத்துக்கும் அதிகமான பணப் பரிவர்த்தனைகளுக்கு மேலதிக வரி விதிக்கப்படலாம் – உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரிக்கை
ரூ. 5 இலட்சத்துக்கும் அதிகமான பெறுமதியுடைய பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வோருக்கு, நடைமுறையிலுள்ள வரி விதிமுறைகளின் கீழ் மேலதிக வரிச் சுமை ஏற்படக்கூடும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) எச்சரித்துள்ளது.
காணி, சொத்து மற்றும் வாகனக் கொடுக்கல் வாங்கல்கள் உள்ளிட்ட பரிவர்த்தனைகளுக்கும் இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தும் என திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, அனுமதிக்கப்பட்ட கொடுப்பனவு முறைக்கு அப்பால், ரூ. 5 இலட்சத்துக்கும் அதிகமான வணிகச் செலவுகள் ரொக்கமாகச் செலுத்தப்பட்டால், அவை வரிக்குட்பட்ட வருமானத்தைக் கணக்கிடும்போது கழித்துக் கொள்ளக்கூடிய செலவுகளாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என அவர் விளக்கியுள்ளார்.
உதாரணமாக, ஒரு நிறுவனம் தனது வணிகச் செலவுக்காக ரூ. 10 இலட்சத்தை ரொக்கமாகச் செலுத்தினால், அந்தத் தொகையை வரிக் கணக்கீட்டில் செலவாகக் கழித்துக்கொள்ள முடியாது.
இதனால், குறித்த ரூ. 10 இலட்சமும் நிறுவனத்தின் வரிக்குட்பட்ட இலாபத்துடன் சேர்க்கப்படும். இதன்படி, 30 சதவீத வழமையான நிறுவன வருமான வரி வீதத்தின் கீழ், மேலதிகமாக ரூ. 3 இலட்சம் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேபோன்ற கட்டுப்பாடுகள் காணி மற்றும் சொத்து விற்பனைப் பரிவர்த்தனைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உதாரணமாக, ஒருவர் ரூ. 90 இலட்சத்துக்கு ஒரு காணியைக் கொள்வனவு செய்து, பின்னர் அதனை ரூ. 1 கோடிக்கு விற்பனை செய்தால், பொதுவான வரிக் கணக்கீட்டின்படி கிடைக்கும் இலாபம் ரூ. 10 இலட்சமாகும்.
எனினும், குறித்த காணி கொள்வனவு நிர்ணயிக்கப்பட்ட கொடுப்பனவு விதிமுறைகளை மீறி ரொக்கமாக மேற்கொள்ளப்பட்டிருந்தால், அதன் கொள்வனவுச் செலவான ரூ. 90 இலட்சத்தை வரிக் கணக்கீட்டில் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படலாம்.
அவ்வாறான சந்தர்ப்பத்தில், உண்மையான இலாபமான ரூ. 10 இலட்சத்துக்குப் பதிலாக, முழுமையான விற்பனைத் தொகையான ரூ. 1 கோடியும் வரிக்குட்பட்ட இலாபமாகக் கணக்கிடப்படக்கூடும் என அவர் விளக்கமளித்துள்ளார்.
நிதிப் பரிவர்த்தனைகளை உத்தியோகபூர்வமான நிதி வழிமுறைகள் ஊடாக மேற்கொள்வதை ஊக்குவித்தல், வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல் மற்றும் வரி கட்டமைப்புக்கு வெளியே இடம்பெறும் நிதிச் செயற்பாடுகளை ஒழுங்குமுறைக்குள் கொண்டுவருதல் ஆகிய நோக்கங்களுக்காகவே இக்கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார்.