இந்தியப் பெருங்கடலில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை!
இந்தியப் பெருங்கடலில் பண்டா ஆச்சே (Banda Aceh) பகுதிக்கு அருகில் இன்று (21) 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையத்தின் தகவலின்படி, இன்று பிற்பகல் 3.12 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
பூமிக்கு அடியில் சுமார் 156 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், தெற்கு அட்சரேகை 8.04 பாகை மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 127.57 பாகை என்ற அமைவிடத்தில் மையம் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் 3.30 மணியளவில் வளிமண்டலவியல் திணைக்களம் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டது.
இலங்கையின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிலைமையைத் தெளிவுபடுத்தும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுடன், குறித்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி ஆபத்து இல்லை என்றும் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.