மருத்துவர்களின் கோரிக்கைகள் புறக்கணிப்பு: தொழிற்சங்க நடவடிக்கைக்கு GMOA தயாராகிறது
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மருத்துவர்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து, எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) கவனம் செலுத்தியுள்ளது.
இதன் முதற்கட்டமாக, எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுக்க அச்சங்கம் தீர்மானித்துள்ளது.
நவம்பர் 19ஆம் திகதி நடைபெற்ற சங்கத்தின் அவசர மத்திய குழுக் கூட்டத்தில் மருத்துவர்களுக்கான பல்வேறு நிதிசார் மற்றும் ஏனைய சலுகைகள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்கத் தீர்மானிக்கப்பட்டதாக, நவம்பர் 21ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச சுகாதார சேவையைத் தொடர்ந்து பேணுவதில் மருத்துவர்கள் ஆற்றிவரும் பங்களிப்பைக் கருத்திற்கொண்டு, குறிப்பாக அண்மைய பொருளாதார நெருக்கடியின்போது மருத்துவர்கள் செய்த தியாகங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் வரவு செலவுத் திட்டத்தில் நிவாரணங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்ததாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மருத்துவர்கள் தமது நிதிசார் தியாகங்கள் மூலம் நாட்டுக்கும் அரசாங்கத்துக்கும் 44 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையைச் சேமித்துக் கொடுத்துள்ளதாகவும் GMOA தெரிவித்துள்ளது.
மருத்துவர்கள் முன்வைத்துள்ள முக்கிய ஐந்து கோரிக்கைகளில், 2018ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட இடையூறு, கிடைப்புநிலை மற்றும் போக்குவரத்துக் கொடுப்பனவை (DAT Allowance) முழுமையாக உடனடியாக வழங்குதல், DAT கொடுப்பனவு மற்றும் மேலதிக கடமை, விடுமுறை தினக் கொடுப்பனவுகளுக்கு வரி விலக்கு வழங்குதல் ஆகியவை உள்ளடங்குகின்றன.
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்ட மேலதிக நேர மற்றும் விடுமுறை தினக் கொடுப்பனவுகளில் மூன்றில் ஒரு பகுதியை மீண்டும் வழங்குதல், 22/99ஆம் இலக்க சுற்றறிக்கைக்கு அமையத் தகுதியுள்ள மருத்துவர்களுக்குப் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் மருத்துவர்களுக்கான வரிச்சலுகையுடன் கூடிய வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் ஆகிய கோரிக்கைகளையும் சங்கம் முன்வைத்துள்ளது.
இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் அடுத்த ஒரு வாரத்திற்குள் ஜனாதிபதி கலந்துரையாடல்களை முன்னெடுப்பார் என எதிர்பார்ப்பதாகவும், இதே காலப்பகுதியில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும் இந்த விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தத் தீர்மானித்துள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் முதற்கட்டமாக, எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து கிளைச் சங்கங்களும் கூட்டங்களை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், இந்த நடவடிக்கைகளின்போது அவசர சிகிச்சைப் பிரிவுகளின் சேவைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என GMOA உறுதியளித்துள்ளது.
எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பான இறுதி முடிவுகளை எடுக்கும் அதிகாரம் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அக்குழுவே அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.