PSTA சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் – விரிவான மக்கள் கருத்தறிதலை நடத்த எதிர்க்கட்சி வலியுறுத்தல்
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் உத்தேச சட்டமூலம் (PSTA) தொடர்பில் இறுதி முடிவை எடுப்பதற்கு முன்னர், விரிவான மக்கள் கருத்தறிதலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, இன்று (23) நாடாளுமன்றத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இந்த விடயத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், உத்தேச சட்டமூலம் தொடர்பில் ஆராய்வதற்காக அரச நிர்வாகம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு இன்று பிற்பகல் கூடவுள்ளதாகத் தெரிவித்தார்.
எனினும், கடந்த நவம்பர் 7ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பொதுமக்களின் கருத்துகள் பெற்றுக்கொள்ளப்படும் என அறிவித்திருந்த நிலையில், அதற்கான நடவடிக்கைகள் முழுமையாக முன்னெடுக்கப்படுவதற்கு முன்னர் குழுவில் இறுதி முடிவொன்றை எடுக்கக்கூடாது என அவர் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் பைசர் முஸ்தபா, அஜித் பி. பெரேரா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் தாமும் இணைந்து சபாநாயகருக்கு எழுத்துமூல கோரிக்கையொன்றைச் சமர்ப்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குறித்த குழுவில் சட்டமூலம் தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுக்க முடியும் என்றாலும், விரிவான மக்கள் கருத்தறிதல் நிறைவடையும் வரை இறுதி முடிவை எடுக்க வேண்டாம் என்பதே தமது கோரிக்கை எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், பல சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு கருத்தறியும் நடவடிக்கைகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், அவர்களுக்கும் தமது கருத்துகளை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்றார்.
இதற்குப் பதிலளித்த நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, உத்தேச சட்டமூலம் உயர் நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இருப்பினும், ஜனாதிபதி மக்கள் கருத்தறியும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்தறியும் நடவடிக்கைகளில் பங்கேற்றவர்கள் தாமாகவே அதற்கான விருப்பத்தைத் தெரிவித்திருந்ததாகக் கூறிய அமைச்சர், மேலதிக கருத்துகள் இருப்பின் அவற்றைத் துறைசார் மேற்பார்வைக் குழுவிலும் முன்வைக்க முடியும் என்றார்.
அத்துடன், இந்த விவகாரம் தொடர்பில் பிரதிச் சபாநாயகர் தீர்மானம் வழங்குவதற்குப் பதிலாக, சம்பந்தப்பட்ட குழுவே முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதன்போது தலையிட்ட பிரதிச் சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ், இந்த விவகாரம் குழு மட்டத்தில் ஆராயப்பட வேண்டியதொன்றெனவும், இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்தார்.
எனினும், தனது நிலைப்பாட்டைத் தொடர்ந்து வலியுறுத்திய சாணக்கியன் இராசமாணிக்கம், 1979ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நினைவுபடுத்தினார்.
அந்தச் சட்டத்திற்குப் பதிலாகக் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றம் மிகவும் கவனமாக ஆராய வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அதனை மீளாய்வு செய்வதற்கான பொறிமுறை நாடாளுமன்றத்தில் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
எனவே, சட்டமூலம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னரான கட்டத்திலேயே அதனை முழுமையாக ஆராய்ந்து, தேவையான திருத்தங்களை மேற்கொள்வது மிகவும் முக்கியமானது எனவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தமது ஆசனங்களிலிருந்து எழுந்து எதிர்ப்புத் தெரிவித்ததால் சபையில் அமளி ஏற்பட்டது.
இதில் தலையிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், இந்த விவகாரத்தைத் துறைசார் மேற்பார்வைக் குழுவுடன் மாத்திரம் மட்டுப்படுத்த முடியாது என நீதியமைச்சர் தெரிவித்த நிலைப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
குறித்த குழு நாடாளுமன்றத்தினால் உருவாக்கப்பட்டதென்பதால், இந்த விவகாரம் தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் மீறப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் எதிர்ப்புகளுக்கு மத்தியில், சாணக்கியன் இராசமாணிக்கத்தின் கருத்துகள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பிரதிச் சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ், இந்த விவகாரம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட குழுவில் முன்னெடுக்கப்பட வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினார்.