திருகோணமலையில் ரயிலில் மோதுண்டு இரு மீனவர்கள் உயிரிழப்பு; ஒருவர் படுகாயம்
திருகோணமலை, கோட் பே மீன்பிடித் துறைமுகப் பகுதியில் ரயிலில் மோதுண்டு இரு மீனவர்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (22) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த ரயில், ரயில் பாதையில் நின்றுகொண்டிருந்த மூவரின் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், படுகாயமடைந்த ஏனைய இருவரும் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர்கள் மாத்தறை மற்றும் தேவேந்திரமுனை பகுதிகளைச் சேர்ந்த 48 மற்றும் 58 வயதுடைய மீனவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இருவரினதும் சடலங்கள் திருகோணமலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.