வாகன இறக்குமதி வரி மோசடி குற்றச்சாட்டுடன் தொடர்பில்லை – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
வாகன இறக்குமதி வரி மோசடி தொடர்பில் தாம் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக வெளியாகியுள்ள ஊடகச் செய்திகளை முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மறுத்துள்ளார்.
தமக்கு எதிராக மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகள் மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கு தொடர்பில் சில ஊடகங்கள் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளதாக, புதன்கிழமை (28) வெளியிட்ட அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகள் மட்டுமே முன்வைக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், குறித்த வாகனத்தை இறக்குமதி செய்தமை, அதன் உரிமையாளராக இருந்தமை அல்லது அதற்கான இறக்குமதி வரியைச் செலுத்தத் தவறியமை தொடர்பில் தமக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், சர்ச்சைக்குரிய வாகனத்தின் உரிமையாளர் தாமல்ல என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வாகனமொன்றை வைத்திருந்தமை தொடர்பான சட்டக் குற்றச்சாட்டை ஒப்புக்கொள்வதும், வாகன இறக்குமதி வரி மோசடியில் ஈடுபட்டதாக ஒப்புக்கொள்வதும் முற்றிலும் வேறுபட்ட விடயங்கள் என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த வாகனத்தைத் தமது வசம் வைத்திருந்த நபருக்கு எதிராக கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் தனியான வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, தாம் வாகன இறக்குமதி வரி மோசடியில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டதாக வெளியான செய்திகள் பொய்யானவை மற்றும் தவறாக வழிநடத்தக்கூடியவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் ஒப்புக்கொண்ட குற்றச்சாட்டுகளின் உண்மையான சட்டத் தன்மையைத் தெளிவாக விளக்கி, ஏற்கனவே வெளியிட்ட செய்திகளில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் ஊடக நிறுவனங்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.