பறவை மோதியதாகச் சந்தேகம் – ஸ்ரீலங்கன் விமானத்தின் புறப்பாடு இடைநிறுத்தம்!
கொழும்பிலிருந்து லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் நோக்கிப் பயணிக்கவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமொன்றின் புறப்பாட்டின்போது, அதன் இயந்திரமொன்றில் பறவை மோதியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விமானிகள் புறப்பாட்டை இடைநிறுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் இன்று (28) கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
பிற்பகல் 12.55 மணிக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டிருந்த UL503 என்ற விமானமே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது.
விமானம் புறப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோது, அதன் இயந்திரமொன்றில் பறவை மோதியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானிகள் புறப்பாட்டை நிறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, விமானம் மீண்டும் நிறுத்துமிடத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் அனைவரும் எவ்வித பாதிப்புமின்றி பாதுகாப்பாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, லண்டன் ஹீத்ரோ நோக்கிய பயணத்தை முன்னெடுப்பதற்காக மாற்று விமானமொன்றும் புதிய பணிக்குழுவினரும் ஏற்பாடு செய்யப்பட்டனர். மாற்று விமானம் பிற்பகல் 4.30 மணிக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அது தற்போது லண்டன் நோக்கிப் புறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தினால் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளதுடன், பயணிகளின் பாதுகாப்பே தமது முதன்மையான முன்னுரிமை என்றும் வலியுறுத்தியுள்ளது.