ஆசிய – பசுபிக் பிராந்திய ஐ.நா. மாநாட்டின் துணைத் தலைவராக நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவு!
இலங்கையின் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ, ஆசிய – பசுபிக் பிராந்தியத்திற்கான ஐந்தாவது அமைச்சர்கள் மாநாட்டின் (MC-5) துணைத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்தின் பாங்கொக் நகரில் நேற்று புதன்கிழமை (28) ஆரம்பமான இந்த மாநாடு, ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய – பசுபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழு (UNESCAP) மற்றும் தாய்லாந்து அரசாங்கம் ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில் நடைபெறுகிறது.
பாங்கொக்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மாநாட்டு மையத்தில் நடைபெறும் இம்மாநாட்டில் இலங்கை சார்பில் கலந்துகொண்ட அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, நிலையான அபிவிருத்தி இலக்குகளை (SDGs) அடைவதில் உலகளாவிய முன்னேற்றம் மந்தமடைந்து வருவது குறித்து உரையாற்றினார்.
தேசிய பொது சுகாதாரக் கட்டமைப்புகளில் செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட டிஜிட்டல் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இதன் மூலம் நோய்ப் பரவல்களைக் கண்காணித்தல், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சுகாதார அச்சுறுத்தல்களை மதிப்பீடு செய்தல், அனர்த்தங்களுக்கான தயார்நிலையை வலுப்படுத்துதல் மற்றும் சுகாதார சேவைகளைப் பொதுமக்களுக்கு விரிவுபடுத்துதல் போன்றவற்றை மேம்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், நிதி மற்றும் தொழில்நுட்ப ஆற்றல் பற்றாக்குறைகளை எதிர்கொள்ளும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார்.
இதற்காக, தொழில்நுட்பக் கருவிகள், நிபுணத்துவம் மற்றும் வளங்களைப் பகிர்ந்துகொள்வதுடன், நிறுவனங்களின் ஆற்றலையும் மேம்படுத்தும் வகையில் பிராந்திய நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
இந்த மாநாட்டில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க, அரச சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர் பொறியியலாளர் (டொக்டர்) சனத் பனாவென்ன மற்றும் தாய்லாந்திலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.