நாமல் ராஜபக்ஷவின் பிணை மனு விசாரணையில் அலி சப்ரியின் கருத்துக்கு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கேள்வி
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பிணை மனு விசாரணையின்போது, அவருக்காக மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்த கருத்துத் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கேள்வி எழுப்பியுள்ளது.
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷவின் பிணை மனு மீதான விசாரணை, நேற்று புதன்கிழமை (28) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றபோதே இந்த விவகாரம் எழுந்துள்ளது.
இதன்போது, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சார்பில் முன்னிலையான சிரேஷ்ட உதவிப் பணிப்பாளர் தனுஜா பண்டார, அலி சப்ரி தெரிவித்த கருத்து ஆணைக்குழுவையா, விசாரணை அதிகாரிகளையா அல்லது வழக்கின் சாட்சிகளையா குறிக்கிறது எனக் கேள்வி எழுப்பினார்.
குறித்த வழக்கில் இரண்டு சாட்சிகள், தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் உயிர் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக முன்னதாக வழங்கிய வாக்குமூலங்களில் உண்மைகளைத் தெரிவிக்காமல் இருந்ததாக அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
எனினும், நாமல் ராஜபக்ஷவும் மற்றொரு சந்தேகநபரான ஜானகி சிறிவர்தனவும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர், தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்த அந்தச் சாட்சிகள் மேலதிக வாக்குமூலங்களை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறான சூழலில், எதிர்காலத்தில் பாதிக்கப்படக்கூடியவர்களாக அலி சப்ரி குறிப்பிட்டது இந்தச் சாட்சிகளையா எனவும் தனுஜா பண்டார கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அலி சப்ரி, தாம் தெரிவித்த கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகக் கூறினார்.
“இன்று ஜனாதிபதி நீதிமன்றத் தீர்ப்புகள் வழங்கப்படும் திகதிகளை அறிவிக்கிறார். அத்துடன், 50 பேர் அடங்கிய பட்டியல் குறித்தும் பேசுகிறார். எனவே, அந்தக் கருத்து உங்களுக்குப் பொருந்தினால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள்” என அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவும் நீதித்துறையும் சுயாதீனமான நிறுவனங்கள் எனக் குறிப்பிட்ட அலி சப்ரி, சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள் என்றும் வலியுறுத்தினார்.
அரசியல்ரீதியான கருத்துக்களின் அடிப்படையில் நாமல் ராஜபக்ஷ பாகுபாட்டுக்கு உள்ளாக்கப்படக் கூடாது என்றும், அதேவேளை அவருக்கு விசேட சலுகைகளும் வழங்கப்படக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதியாகக் கருதப்பட வேண்டும் என்ற அரசியலமைப்பின் 13(5) ஆவது உறுப்புரையைச் சுட்டிக்காட்டிய அவர், நாமல் ராஜபக்ஷவுக்கும் இந்த அடிப்படையில் நியாயமான அணுகுமுறை வழங்கப்பட வேண்டும் என வாதிட்டார்.
இதனிடையே, நாமல் ராஜபக்ஷவின் பெற்றோர் கடுமையான உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளதாகவும், அவரது தாயார் முந்தைய தினம் இருதய சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அலி சப்ரி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்தக் காரணங்களை விதிவிலக்கான சூழ்நிலைகளாகக் கருதி நாமல் ராஜபக்ஷவுக்குப் பிணை வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
எனினும், இந்தக் காரணங்கள் விதிவிலக்கான சூழ்நிலைகளாகக் கருதப்பட முடியாது எனத் தெரிவித்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, பிணை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.
அத்துடன், வழக்கின் சாட்சிகள் மீது செல்வாக்குச் செலுத்தப்படக்கூடிய சாத்தியங்கள் இருப்பதால் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியம் என்றும் ஆணைக்குழு வலியுறுத்தியது.
இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, நாமல் ராஜபக்ஷவின் பிணை மனு தொடர்பான உத்தரவு எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.