லலித் பியும் பெரேரா கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிப்பு!
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் (NYSC) முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகமான லலித் பியும் பெரேரா, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளால் இன்று (28) கைது செய்யப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் அவர் பதவி வகித்த காலப்பகுதியில், அரசாங்கத்திற்கு 51 இலட்சம் ரூபாய் நிதி இழப்பை ஏற்படுத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளின்படி, அம்பாறை சமபுர பகுதியில் அமைந்துள்ள காணி மற்றும் கட்டடம் ஒன்றை அரசாங்கத்திற்குச் சொந்தமான சொத்தாகத் தவறாகக் குறிப்பிட்டு, அதற்கான குத்தகை ஒப்பந்தங்களை ஏற்பாடு செய்ததாகப் பெரேரா மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
பின்னர் குறித்த காணி மற்றும் கட்டடம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்குக் குத்தகைக்கு வழங்கப்பட்டதாகவும், இதன் மூலம் மன்றத்தின் நிதியிலிருந்து 38 இலட்சம் ரூபாய் சட்டவிரோதமாக மூன்றாம் தரப்பினருக்குச் செலுத்தப்பட்டதாகவும் விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் சபையின் முறையான அனுமதியின்றி, குறித்த கட்டடத்தைப் புனரமைப்பதற்காக மேலதிகமாக 13 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட லலித் பியும் பெரேரா, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.