மஹியங்கனையில் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் உடற்பாகங்கள் பெருமளவில் மீட்பு – சந்தேகநபர் கைது!
மஹியங்கனை பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்ததாகக் கூறப்படும் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் தோல்கள் மற்றும் உடற்பாகங்கள் பெருமளவில் மீட்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி, கிராந்துருகோட்டை யானைகள் முகாமைத்துவப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
மஹியங்கனை – பதியத்தலாவ வீதியில், வெவத்த, அம்பலவத்த பகுதியில் வசிக்கும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, நான்கு யானைத் தந்தப் பற்கள், யானையின் முதுகெலும்புப் பகுதிகள், பெருமளவிலான முள்ளம்பன்றி முட்கள், நூற்றுக்கணக்கான யானை வால் முடிகள், சிறுத்தையின் தோல் துண்டுகள், முதலைத் தோல், இரண்டு மரநாய்களின் தோல்கள், மரநாயின் தலை மற்றும் இறைச்சி, இரண்டு மான்களின் தோல்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், 1,000 இற்கும் அதிகமான மயில் இறகுகள், சிறுத்தையின் மண்டையோடு, கரடி எண்ணெய் மற்றும் பன்றிக் கொழுப்பு அடங்கிய பல போத்தல்களும் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட வனவிலங்குகளின் உடற்பாகங்கள் ஆகியன அன்றைய தினமே மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.
இதனையடுத்து, சந்தேகநபரை எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.