சம்பளம் வழங்கப்படாமைக்கு எதிராக ‘மவ்பிம’ மற்றும் ‘சிலோன் டுடே’ ஊடகவியலாளர்கள் போராட்டம்
முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் உரிமையாளராகக் கொண்ட ‘Mawbima.lk’ மற்றும் ‘Ceylon Today’ ஊடக நிறுவனங்களின் தற்போதைய மற்றும் முன்னாள் ஊழியர்கள், நிலுவையிலுள்ள சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஊழியர்களுக்குச் செலுத்தப்பட வேண்டிய சம்பள நிலுவைகள், தாமதமான கொடுப்பனவுகள் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் (EPF), ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) ஆகியவற்றுக்கான நிலுவைப் பங்களிப்புகளை உடனடியாகச் செலுத்த வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
ஊடகத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுவரும் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அவர்களுக்குச் சட்டரீதியாகக் கிடைக்க வேண்டிய தொழிலாளர் உரிமைகள் உறுதிப்படுத்தப்படாமை தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
போராட்டத்தில் உரையாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர் பிங்குன் மேனக கமகே, இலங்கையில் அர்த்தமுள்ள ஊடக மறுசீரமைப்பை முன்னெடுப்பதற்குப் பொருளாதார நெருக்கடிகளுக்கும் தீர்க்கப்படாத தொழிலாளர் உரிமைப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படுவது அவசியம் எனத் தெரிவித்தார்.
ஊடகவியலாளர்களின் பொருளாதாரப் பாதுகாப்பையும் தொழிலாளர் உரிமைகளையும் உறுதிப்படுத்துவதற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், அரசியல் விவாதங்களுக்கும் டிஜிட்டல் ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கும் முன்னதாக இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்தப் போராட்டத்திற்கு இலங்கை தொழில்முறை ஊடகவியலாளர்கள் சங்கம், இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம், இலங்கை முஸ்லிம் ஊடக மன்றம் மற்றும் தமிழ் ஊடக மன்றம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் ஆதரவு தெரிவித்துப் பங்கேற்றனர்.
சம்பளம் வழங்கப்படாமை, சட்டரீதியாகச் செலுத்தப்பட வேண்டிய நிதிப் பங்களிப்புகள் நிலுவையில் உள்ளமை, ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டன.
இந்நிலையில், போராட்டக்காரர்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளித்த சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஊடகத்துறை ஊழியர்களின் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நடைமுறையிலுள்ள சட்ட வரையறைகளுக்கு உட்பட்டு அரசாங்கம் தலையிடத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
ஊடக நிறுவனங்கள் தொடர்பில் முன்வைக்கப்படும் முறைப்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்காக, லேக்ஹவுஸ் உள்ளிட்ட அரச ஊடக நிறுவனங்கள் தொடர்பான விவகாரங்களிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றுக்கான பங்களிப்புகளைச் செலுத்தத் தவறியமை உள்ளிட்ட தொழிலாளர் உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள், எந்தவொரு அரசியல் பிரமுகருக்கும் அல்லது நிறுவனத்திற்கும் விசேட சலுகைகள் வழங்கப்படாமல் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
பாதிக்கப்பட்ட ஊடக நிறுவன ஊழியர்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.