நவம்பர் மாதத்தில் இலங்கைக்கு மூன்று கப்பல்களில் எரிவாயுவை இறக்குமதி செய்ய LAUGFS Gas நடவடிக்கை
இலங்கையில் நிலவும் சமையல் எரிவாயு விநியோகத் தட்டுப்பாட்டைச் சீரமைக்கும் நோக்கில், 2026 நவம்பர் மாதத்திற்குள் மூன்று கப்பல்களில் திரவப் பெற்றோலிய எரிவாயுவை (LPG) இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக LAUGFS Gas நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, நவம்பர் மாதத்தில் இலங்கைக்கு வரவுள்ள எரிவாயுக் கப்பல்களின் விபரங்களையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி,
- நவம்பர் 12 – 14: OQT நிறுவனத்தின் எரிவாயுக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
- நவம்பர் 15 – 17: Geogas நிறுவனத்தின் எரிவாயுக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
- நவம்பர் 24 – 28: OQT நிறுவனத்தின் மற்றுமொரு எரிவாயுக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
இதேவேளை, உள்நாட்டுச் சந்தைக்கான எரிவாயு விநியோகத்தை அதிகரிக்கும் நோக்கில், ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள தனது LPG முனையத்தைப் பயன்படுத்துவதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துத் தடைகள் காரணமாக, உலகளாவிய எரிவாயு விநியோகச் சங்கிலியில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கையின் எரிவாயு விநியோகப் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக LAUGFS Gas குறிப்பிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, ஹம்பாந்தோட்டையில் 30,000 மெட்ரிக் தொன் கொள்ளளவைக் கொண்ட எரிவாயு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி முனையத்தை அமைப்பதற்காக 65 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளதாகவும் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போதைய விநியோகத் தடங்கல்கள் காரணமாக நுகர்வோர் எதிர்கொண்டுள்ள அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள LAUGFS Gas, எரிவாயு விநியோகத்தை விரைவில் வழமைக்குக் கொண்டுவருவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளது.