டிஜிட்டல் நிதிச் சேவைகளில் சைபர் தாக்குதல், மோசடி மற்றும் தரவுக் கசிவு அபாயம் – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை!
இலங்கையில் டிஜிட்டல் நிதித் தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், சைபர் தாக்குதல்கள், நிதி மோசடிகள் மற்றும் தனிப்பட்ட தரவுக் கசிவுகள் உள்ளிட்ட புதிய அபாயங்கள் நாட்டின் நிதிக் கட்டமைப்புக்கும் நுகர்வோருக்கும் ஏற்படக்கூடும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற இலங்கை நிதித் தொழில்நுட்ப விழாவில் (Sri Lanka FinTech Festival) உரையாற்றியபோதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
நிதித் தொழில்நுட்பங்களில் புதிய கண்டுபிடிப்புகளும் முன்னேற்றங்களும் ஏற்படுவது அவசியமானது என்றாலும், அதனுடன் நுகர்வோரைப் பாதுகாப்பதற்கான வலுவான ஒழுங்குமுறை நடவடிக்கைகளும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
சைபர் தாக்குதல்கள், தொழில்நுட்பச் செயல்பாடுகளில் ஏற்படும் தடங்கல்கள், நிதி மோசடிகள், தரவுக் கசிவுகள், நுகர்வோருக்கு போதிய தகவல்கள் வழங்கப்படாமை மற்றும் அளவுக்கு அதிகமான கடன் சுமைகள் போன்றவை நிதித் தொழில்நுட்ப வளர்ச்சியால் உருவாகக்கூடிய முக்கிய அபாயங்களாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அத்தியாவசியமான நிதிச் சேவைகள் சில தொழில்நுட்ப நிறுவனங்களிடையே அதிகளவில் குவிந்து வருவது குறித்தும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். இத்தகைய நிலைமைகள் நாட்டின் நிதிக் கட்டமைப்பில் மேலதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.
எல்லை தாண்டிய டிஜிட்டல் நிதிப் பரிவர்த்தனைகளைக் கண்காணிப்பதில் ஒழுங்குமுறை அதிகாரிகளுக்கு சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, சில டிஜிட்டல் சொத்துக்களின் விலைகளில் ஏற்படக்கூடிய பாரிய ஏற்ற இறக்கங்கள் நுகர்வோருக்கு நிதி இழப்புகளை ஏற்படுத்துவதுடன், சட்டவிரோத நிதிச் செயற்பாடுகளுக்கும் வழிவகுக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழில்நுட்பப் புத்தாக்கங்களைத் தொடர்ந்து ஏற்றுக்கொண்டாலும், நாட்டின் நிதி உறுதித்தன்மையை ஒருபோதும் பாதிப்புக்குள்ளாக்க முடியாது என மத்திய வங்கி ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.
புதிய தொழில்நுட்பங்களையும் போட்டித்தன்மையையும் ஊக்குவிப்பதுடன், அவற்றை முறையாகக் கண்காணித்தல், இடர் முகாமைத்துவத்தை வலுப்படுத்துதல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றுக்கு இடையில் சரியான சமநிலையைப் பேணுவதே தற்போதைய சவாலாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் கொடுப்பனவுகள், கையடக்கத் தொலைபேசி வங்கிச் சேவைகள், இணையவழி வங்கிச் சேவைகள் உள்ளிட்ட நிதித் தொழில்நுட்பங்கள் ஏற்கனவே இலங்கையில் தனிநபர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் நிதிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், டிஜிட்டல் அடையாள முறைமைகள், தரவுகளை அடிப்படையாகக் கொண்ட கடன் வழங்கல், எல்லை தாண்டிய கொடுப்பனவுகளுக்கான இணைப்பு வசதிகள் மற்றும் டிஜிட்டல் முதலீட்டுச் சேவைகள் போன்ற எதிர்கால முன்னேற்றங்கள் இலங்கையின் நிதித் துறைக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், பொறுப்பான நிதித் தொழில்நுட்பப் புத்தாக்கங்களுக்கு ஆதரவளிப்பதில் மத்திய வங்கி உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காகத் தகுதியான புதிய நிதித் தொழில்நுட்பத் தீர்வுகளை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பரீட்சித்துப் பார்ப்பதற்கு அனுமதிக்கும் FinTech Regulatory Sandbox என்ற ஒழுங்குமுறைச் சோதனைத் திட்டத்தையும் மத்திய வங்கி நடைமுறைப்படுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஊக்குவிக்கப்படும் அதேவேளை, பொதுமக்களின் நம்பிக்கை, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் இலங்கையின் நிதிக் கட்டமைப்பின் உறுதித்தன்மை ஆகியவை தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.