அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கைப்பற்றும் ஜனநாயகக் கட்சி – ட்ரம்புக்கு பெரும் அரசியல் பின்னடைவு!
அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களைத் தொடர்ந்து, அந்நாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையைப் பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக CNN செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை ஆகிய இரண்டிலும் குடியரசுக் கட்சியின் கட்டுப்பாடு முடிவுக்கு வந்து, ஜனநாயகக் கட்சி மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தேர்தல் முடிவு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு மிகப்பெரிய அரசியல் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இதன் மூலம், ட்ரம்பின் கொள்கைத் திட்டங்களை எதிர்ப்பதற்கும், அவரது நிர்வாகத்தின் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்கும் ஜனநாயகக் கட்சியினருக்கு அதிக அதிகாரம் கிடைக்கவுள்ளது.
மேலும், நாடாளுமன்றக் குழுக்களின் கட்டுப்பாட்டையும் ஜனநாயகக் கட்சி பெற்றுக்கொள்ளும் என்பதால், ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்கும் வாய்ப்பும் உருவாகியுள்ளது.
செனட் சபையையும் ஜனநாயகக் கட்சி கைப்பற்றுவதன் மூலம், மத்திய நீதிபதிகள் மற்றும் அரச நிர்வாகத்தின் முக்கிய அதிகாரிகளுக்கான ஜனாதிபதியின் நியமனங்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளிலும் செல்வாக்குச் செலுத்த முடியும்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பணவீக்கம் மற்றும் நாட்டின் எதிர்காலப் போக்கு தொடர்பான மக்களின் கவலைகள் தேர்தல் பிரசாரங்களில் முக்கிய இடம்பிடித்திருந்த நிலையில், இந்தத் தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், குடியரசுக் கட்சிக்குக் கிடைத்த பின்னடைவு தொடர்பில் கருத்துத் தெரிவித்த ட்ரம்ப், தாமும் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் கட்சி அமோக வெற்றி பெற்றிருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
“நான் தேர்தலில் போட்டியிடவில்லை. நான் போட்டியிட்டிருந்தால் நாம் அமோக வெற்றி பெற்றிருப்போம்” என அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் ஜனநாயகக் கட்சி கைப்பற்றினாலும், ஜனாதிபதி என்ற வகையில் ட்ரம்பின் அதிகாரங்களும், சட்டமூலங்களுக்கு மறுப்புத் தெரிவிக்கும் அதிகாரமும் தொடர்ந்து நீடிக்கும்.
இந்நிலையில், தனது பதவிக்காலத்தின் எஞ்சிய இரண்டு ஆண்டுகளில் முக்கிய கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் ட்ரம்ப் நிர்வாகம் பல்வேறு அரசியல் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.