ஆற்றில் மூழ்கிய பெண்ணைத் துணிச்சலுடன் காப்பாற்றிய நபர்!
ஆற்றில் மூழ்கிக்கொண்டிருந்த பெண் ஒருவரை, தனது உயிரைப் பணயம் வைத்துத் தண்ணீரில் குதித்த நபர் ஒருவர் துணிச்சலுடன் காப்பாற்றியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
சம்பவம் தொடர்பில் மீட்புப் பணியில் ஈடுபட்ட நபர் தெரிவிக்கையில், பாலமொன்றுக்கு அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தபோது, உதவி கோரி மக்கள் கூச்சலிடும் சத்தம் கேட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது பெண் ஒருவர் ஆற்றில் மூழ்கிக்கொண்டிருப்பதைக் கண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
உடனடியாகத் தனது மேலாடையைக் கழற்றி, கையடக்கத் தொலைபேசி மற்றும் பணப்பையை ஓரமாக வைத்துவிட்டு, பெண்ணைக் காப்பாற்றும் நோக்கில் ஆற்றில் குதித்துள்ளார்.
பின்னர், தனது நண்பர்களின் உதவியுடன் கயிற்றைப் பயன்படுத்தி பெண்ணைப் பாதுகாப்பாகக் கரைக்குக் கொண்டு வந்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த பெண் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது நலமுடன் குணமடைந்து வருவதாகவும் மீட்புப் பணியில் ஈடுபட்ட நபர் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்தச் சம்பவம் இடம்பெற்ற சரியான இடம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.