இலங்கையில் டிஜிட்டல் சொத்துக்களைப் பணப் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்த முடியாது – மத்திய வங்கி ஆளுநர்
இலங்கையில் வசிப்பவர்களுக்கு இடையிலான பணப் பரிவர்த்தனைகளில் டிஜிட்டல் சொத்துக்கள் அல்லது மெய்நிகர் சொத்துக்களைப் பயன்படுத்துவதற்கு தற்போதைய சட்டக் கட்டமைப்பின் கீழ் அனுமதி இல்லை என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று (03) நடைபெற்ற இலங்கை ஃபின்டெக் (FinTech) திருவிழாவில் உரையாற்றிய அவர், உள்நாட்டுப் பணப் பரிவர்த்தனைகளில் இலங்கை ரூபாய்க்குப் பதிலாக டிஜிட்டல் சொத்துக்கள் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கும், நாட்டின் நாணய இறையாண்மையைப் பாதுகாப்பதற்கும் இந்தக் கட்டுப்பாடு அவசியமானது எனத் தெரிவித்தார்.
டிஜிட்டல் சொத்துக்கள் உள்ளிட்ட வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்கள் நிதித்துறையில் பல்வேறு புதிய வாய்ப்புகளை உருவாக்கக்கூடும் எனக் குறிப்பிட்ட அவர், அவற்றை முறையாகக் கையாள்வதற்குத் தெளிவான ஒழுங்குமுறைகளும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் அவசியம் என வலியுறுத்தினார்.
தொழில்நுட்பம் வளர்ச்சியடையும் போது அதற்கேற்ப ஒழுங்குமுறைகளும் மேம்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்த ஆளுநர், நிதி உறுதித்தன்மையைப் பாதிக்காமல் பொறுப்பான புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஒழுங்குமுறைகள் அமைய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
சில டிஜிட்டல் சொத்துக்களின் பெறுமதியில் பாரிய ஏற்ற இறக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதுடன், சட்டவிரோத நிதிச் செயற்பாடுகளுக்கும் அவை பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.
மேலும், இணையவழித் தாக்குதல்கள், தொழில்நுட்பக் கட்டமைப்புச் செயலிழப்புகள், மோசடிகள், தரவுக் கசிவுகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பில் காணப்படும் குறைபாடுகள் உள்ளிட்ட நிதித் தொழில்நுட்பத் துறையின் பல்வேறு ஆபத்துக்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் டிஜிட்டல் நிதிச் சேவைகளை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளின்போது நாட்டின் நிதி உறுதித்தன்மை எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்றும் மத்திய வங்கி ஆளுநர் வலியுறுத்தினார்.
இதேவேளை, நிதித்துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு மத்திய வங்கி தொடர்ந்து ஆதரவளித்து வருவதாகத் தெரிவித்த அவர், தகுதியான புதிய நிதித் தொழில்நுட்பத் தீர்வுகளை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பரிசோதிப்பதற்காக 'FinTech Regulatory Sandbox' என்ற ஒழுங்குமுறைச் சோதனைத் திட்டத்தையும் மத்திய வங்கி அறிமுகப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
நிதித்துறையில் போட்டித்தன்மையையும் தொழில்நுட்ப வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் அதேவேளை, நிதி உறுதித்தன்மை, பொதுமக்களின் நம்பிக்கை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து மத்திய வங்கி தொடர்ந்து செயற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.