இலங்கையின் மிக வயதான ஆண் 111ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார்; 92 பேரக்குழந்தைகள்!
இலங்கையில் உயிருடன் வாழும் மிக வயதான ஆணாகக் கருதப்படும் பி.எச். மெனியல் தனது 111ஆவது வயதை எட்டியுள்ளதாக முதியோர் உரிமைகளுக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது.
கரந்தெனிய, அங்குலுகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த இவர், 1915ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் திகதி பிறந்துள்ளார்.
111 வயதை எட்டியுள்ள நிலையிலும் அவர் நல்ல மனநலத்துடன் இருப்பதுடன், சிறந்த நினைவாற்றலையும் கொண்டுள்ளதாக முதியோர் உரிமைகளுக்கான தேசிய செயலகம் குறிப்பிட்டுள்ளது.
குடும்பத்தினரின் அன்பும் பராமரிப்பும் கிடைத்து வருவதால், அவர் மகிழ்ச்சியுடனும் சுறுசுறுப்புடனும் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெனியலுக்கு ஐந்து மகன்களும் நான்கு மகள்களுமாக மொத்தம் ஒன்பது பிள்ளைகள் உள்ளனர். அவர்களில் மூத்த பிள்ளை உயிரிழந்துள்ள நிலையில், ஏனைய எட்டுப் பிள்ளைகளும் நலமாக வாழ்ந்து வருகின்றனர்.
மேலும், அவருக்கு 92 பேரக்குழந்தைகளும் 12 பூட்டப்பேரக்குழந்தைகளும் உள்ளனர்.
அவரது நலனைப் பேணுவதற்குத் தேவையான பராமரிப்பு, வசதிகள் மற்றும் சமூகத் தொடர்புகளைத் தொடர்ந்து பேணுவதற்கான வாய்ப்புகளை அவரது பிள்ளைகள் அனைவரும் இணைந்து வழங்கி வருவதாக முதியோர் உரிமைகளுக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இலங்கையில் உயிருடன் வாழும் மிக வயதான ஆணாக அவரைக் கௌரவிக்கும் வகையில், முதியோர் உரிமைகளுக்கான தேசிய செயலகம் மற்றும் கரந்தெனிய பிரதேச செயலக அதிகாரிகள் நேற்று முன்தினம் (03) அவரது இல்லத்திற்குச் சென்று கௌரவித்துள்ளனர்.