பிரான்ஸ் போராட்டங்களுக்கு குடியேறிகளே காரணம் எனக் குற்றச்சாட்டு – தீவிர வலதுசாரிகளின் அரசியல் பிரசாரம் தீவிரம்!
பிரான்ஸில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிராக வெடித்த போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ள நிலையில், குடியேற்றவாசிகளே இதற்குக் காரணம் என உலகின் பல நாடுகளைச் சேர்ந்த தீவிர வலதுசாரி அரசியல்வாதிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். எனினும், பிரான்ஸில் இடம்பெற்ற வன்முறைகளுக்கும் குடியேற்றவாசிகளுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக எந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை.
அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் அரசியல் தலைவர்கள், பிரான்ஸில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையைத் தங்களது அரசியல் பிரசாரங்களுக்குப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, முக்கியமான தேர்தல்களை எதிர்கொண்டுள்ள சூழலில், குடியேற்றம் தொடர்பான விவகாரத்தை முன்னிறுத்தி வலதுசாரி அரசியல் சக்திகள் தங்களது ஆதரவைத் திரட்ட முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரான்ஸ் குடியேறிகள், ஜிஹாதிகள் மற்றும் கம்யூனிஸ்டுகளால் கைப்பற்றப்பட்டு, சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்காவின் உள்நாட்டு அரசியல் விவாதங்களுடன் ஐரோப்பிய நாடுகளின் நிலைமைகளைத் தொடர்புபடுத்தும் அவரது நிர்வாகத்தின் அணுகுமுறையின் ஒரு பகுதியாகவே இந்தக் கருத்து பார்க்கப்படுகிறது.
ஸ்பெயினின் தீவிர வலதுசாரிக் கட்சியான வோக்ஸ் (Vox) கட்சியின் தலைவர் சாண்டியாகோ அபாஸ்கலும் பிரான்ஸின் நிலைமையை முன்வைத்து எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரான்ஸின் லிமோஜ் நகரில் உள்ள 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நகர மண்டபம் தீப்பற்றி எரியும் காட்சியுடன் வெளியிட்ட பதிவில், “இஸ்லாமிய இடதுசாரித்துவம்” குறித்து அவர் விமர்சித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் பிரான்ஸ் “தீவிர இஸ்லாத்தின் படையெடுப்புக்கு” உள்ளாகியுள்ளதாகக் கூறியிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் புதன்கிழமை கருத்துத் தெரிவிக்கையில், பிரான்ஸின் நிலைமையைத் தங்களது அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவோரையும், வெளிநாட்டுத் தலைவர்கள் உட்பட பலர் வெளியிடும் “முட்டாள்தனமான கருத்துகளையும்” விமர்சித்தார். எனினும், அவர் எந்தவொரு தலைவரின் பெயரையும் நேரடியாகக் குறிப்பிடவில்லை.
குடியேற்ற எதிர்ப்பைத் தாண்டி சட்டம், ஒழுங்குக்கு முக்கியத்துவம் – மரின் லு பென்
பிரான்ஸின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னிலை வகிப்பதாகக் கூறப்படும் தீவிர வலதுசாரித் தலைவரான மரின் லு பென், இந்த விவகாரத்தில் ஓரளவு மாறுபட்ட அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகிறார்.
அவர் குடியேற்றம் தொடர்பான தனது நிலைப்பாட்டைக் கைவிடவில்லை. பிரான்ஸ் பல தசாப்தங்களாகக் கட்டுப்பாடற்ற குடியேற்றக் கொள்கையைப் பின்பற்றியதன் விளைவுகளை தற்போது அனுபவித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், ஜனாதிபதி மக்ரோனின் அரசாங்கத்தின் இயலாமையையே அவர் பிரதானமாக விமர்சித்துள்ளார். போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துவரும் தீவிர இடதுசாரிக் கட்சியான பிரான்ஸ் அன்பௌன்ட் (France Unbowed – LFI), நாட்டில் உள்நாட்டுப் போரைத் தூண்ட முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
வன்முறைக்குப் பின்னரான விவாதங்களில் காவல்துறையின் நடவடிக்கைகள், பாதுகாப்புக் குறைபாடுகள் மற்றும் சட்டம், ஒழுங்கை மீண்டும் நிலைநாட்டுவது ஆகியவை முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்நிலையில், காவல்துறைக்கு ஆதரவான நிலைப்பாட்டை லு பென் முன்னிறுத்தி வருகிறார். மேலும், இந்தச் சனிக்கிழமை நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள புதிய போராட்டங்களையும் பிரான்ஸ் எதிர்கொள்ளவுள்ளது.
லு பென் வெறுமனே குடியேற்ற எதிர்ப்புக் கட்சியின் தலைவராக மட்டுமன்றி, எதிர்கால ஜனாதிபதியாகவும் தன்னை முன்னிறுத்த விரும்புவதாக பிரான்ஸின் அரசியல் ஆய்வாளரான நோன்னா மேயர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தன்னை ஆட்சிப் பொறுப்பை ஏற்கக்கூடிய நம்பகமான அரசியல் தலைவராக நிலைநிறுத்தும் நீண்டகால முயற்சியின் ஒரு பகுதியாகவே லு பென்னின் தற்போதைய அணுகுமுறை அமைந்துள்ளதாக வெரிஸ்க் மேபிள்கிராஃப்ட் நிறுவனத்தின் ஐரோப்பிய ஆய்வாளர் ஜெஸ் மிடில்டன் குறிப்பிட்டுள்ளார்.
வன்முறையில் பல்வேறு தரப்பினர் பங்கேற்பு
பிரான்ஸில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு தீவிர இடதுசாரிக் குழுக்களே காரணம் என ஜனாதிபதி மக்ரோன் குற்றம்சாட்டியுள்ளார். “பிரெஞ்சு மக்கள் தமது நாட்டுக்கு இப்படிச் செய்கிறார்களே?” எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரான்ஸின் வீடமைப்புத்துறை அமைச்சர் வின்சென்ட் ஜீன்ப்ரூன், வன்முறைகளில் ஈடுபட்டவர்களில் ஒரு பகுதியினர் தொழிலாளர் வர்க்கத்தினர் அதிகமாக வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, போராட்டங்களில் பங்கேற்றவர்களில் குடியேற்றப் பின்னணியைக் கொண்ட பிரெஞ்சுப் பிரஜைகளும் இருந்ததாக அரசியல் விஞ்ஞானி பாஸ்கல் பெரினோ AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
ஆனால், அவர்கள் மட்டுமே வன்முறையில் ஈடுபட்டவர்கள் அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாணவர்கள், புரட்சிகர அரசியல் கொள்கைகளைக் கொண்ட போராட்டக்காரர்கள் மற்றும் வீதிகளில் குழப்பத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்தும் தீவிர “பிளாக் ப்ளொக்” (Black Bloc) குழுவினரும் இதில் அடங்கியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பும் சேவைக் குறைபாடுகளும் முக்கிய காரணங்கள்
பிரான்ஸில் ஏற்பட்டுள்ள போராட்டங்களின் ஆரம்பக் காரணங்களைத் தீர்ப்பது அடுத்த ஜனாதிபதியாகப் பதவியேற்பவருக்கு முக்கிய சவாலாக அமையும்.
முதலில், பாடசாலைகளில் நிலவும் மோசமான நிலைமைகளை எதிர்த்து மாணவர்களால் தொடங்கப்பட்ட போராட்டங்கள், பின்னர் பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு தொடர்பான பரந்துபட்ட மக்களின் அதிருப்தியாக விரிவடைந்தன.
ஜனாதிபதி மக்ரோனுக்கு எதிராக முன்னதாக இடம்பெற்ற, பெரும்பாலும் கிராமப்புற மக்களை மையமாகக் கொண்ட “மஞ்சள் அங்கி” (Yellow Vest) இயக்கம் உட்பட, பிரான்ஸில் பல ஆண்டுகளாகத் தொடரும் போராட்டங்கள், அந்நாட்டில் ஆழமான சமூகப் பிளவுகள் நிலவுவதை வெளிப்படுத்துவதாக அரசியல் விஞ்ஞானி பாஸ்கல் பெரினோ தெரிவித்துள்ளார்.
மேலும், பிரான்ஸில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் மிகவும் கொந்தளிப்பானதாக அமையும் என்றும் அவர் கணித்துள்ளார்.
உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் தரமற்ற பொதுச் சேவைகள் காரணமாக மக்களிடையே நீண்டகாலமாக அதிருப்தி அதிகரித்து வருவதாக சமூக இயக்கங்கள் தொடர்பான வரலாற்று ஆய்வாளர் ஸ்டீபன் சிரோட் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸில் இடம்பெற்ற வன்முறைகள், மேலும் மேலும் துருவமயமாகி வரும் சமூகத்தின் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடியேற்றவாசிகளைக் குற்றம்சாட்டி அரசியல் ஆதரவைத் திரட்டும் முயற்சிகள் ஒருபுறம் இடம்பெறும் நிலையில், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பொதுச் சேவைகளின் குறைபாடுகள் மற்றும் சமூகப் பிளவுகள் போன்ற அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே பிரான்ஸின் எதிர்கால அரசாங்கத்திற்கு முன்னுள்ள முக்கிய சவாலாக உள்ளது.