பாகிஸ்தானில் ஆளுநர் ஆட்சி: அடிப்படை உரிமைகளைப் பறிக்கக் கூடாது என எச்சரிக்கை
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அவசரநிலை மற்றும் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதைக் காரணமாக வைத்து மனித உரிமைகளை மீறவோ, மாற்றுக் கருத்துக்களை ஒடுக்கவோ அல்லது அதிகாரத்தைக் குவிக்கவோ கூடாது என சர்வதேச மன்னிப்புச் சபை பாகிஸ்தான் அதிகாரிகளுக்குக் காரசாரமான எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் தன்னிச்சையாகக் கைது செய்யப்படுதல், இணையச் சேவைகள் துண்டிக்கப்படுதல் மற்றும் ஆயுதப் படைகள் குவிக்கப்படுதல் போன்ற அதிர்ச்சிகரமான செய்திகள் குறித்து சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியாவிற்கான துணைப் பணிப்பாளர் பாபு ராம் பாந்த் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்.
தேசிய அவசரநிலைகளின் போது அரசாங்கங்கள் சில விதிவிலக்கான நடவடிக்கைகளை எடுக்க சட்டப்பூர்வமாக அனுமதி இருந்தாலும், அவை அடிப்படை மனித உரிமைகளைப் பறிப்பதற்குப் பயன்படுத்தப்படக் கூடாது என அவர் சுட்டிக்காட்டினார்.
"அவசரநிலை நடவடிக்கைகள் என்பவை மனித உரிமைகளை அடக்குவதற்கோ, விமர்சனங்களின் குரல்வளையை நெரிப்பதற்கோ அல்லது அதிகாரத்தைத் தன்வசப்படுத்துவதற்கோ வழங்கப்பட்ட கட்டுப்பாடற்ற அதிகாரம் அல்ல," என பாபு ராம் பாந்த் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அரசியலமைப்பின் 232 மற்றும் 234 ஆகிய பிரிவுகளின் கீழ், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அவசரநிலை மற்றும் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்துவதற்கு கூட்டாட்சி அமைச்சரவை பரிந்துரை செய்தது. இதற்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரி ஒப்புதல் அளித்தார்.
மாகாணத்தில் பயங்கரவாதத் தாக்குதல்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாகவும், அரசியலமைப்பு கட்டமைப்பு முற்றிலும் செயலிழந்துவிட்டதாகவும் தெரிவித்தே பாகிஸ்தான் அரசு இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இந்த அவசரநிலைப் பிரகடனத்தின் மூலம், மாகாண சட்டமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரங்கள் கூட்டாட்சி பாராளுமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. அத்துடன் மாகாண முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் ஆலோசகர்கள் அனைவரும் தங்களது பதவிகளை இழந்துள்ளனர். மேலும், மக்களின் பேச்சுரிமை, கூட்டங்களைக் கூட்டும் உரிமை மற்றும் அமைப்புகளாகத் திரளும் உரிமை போன்ற அடிப்படை உரிமைகளை நிறுத்தி வைக்கும் அதிகாரத்தையும் கூட்டாட்சி அரசாங்கம் பெற்றுள்ளது.
இவற்றுக்கு மத்தியில், அரசியலமைப்பின் 245-வது பிரிவின் கீழ், சிவில் அதிகாரிகளுக்கு உதவியாக ராணுவத்தைப் பயன்படுத்த கூட்டாட்சி அரசு உத்தரவிட்டுள்ளது. ராணுவத்தின் இந்தத் தலையீடு மாகாணத்தை மேலும் ராணுவமயமாக்கி, மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும் என சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
பாகிஸ்தானில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது பலவந்தமாக மறைக்கப்படுதல் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள் நிகழ்ந்த வரலாற்றுப் பின்னணியைச் சுட்டிக்காட்டிய பாபு ராம் பாந்த், சாதாரண காவல்துறைப் பணிகளை ராணுவத்திடம் ஒப்படைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அனைத்து ராணுவ நடவடிக்கைகளும் சர்வதேச மனித உரிமை தரநிலைகளுக்கும் சட்டப் பொறுப்புக்கூறலுக்கும் உட்பட்டதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
2013-ஆம் ஆண்டு முதல் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி ஆட்சி செய்து வருகிறது. 2024 பொதுத்தேர்தலிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அக்கட்சி ஆட்சி அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கையாளும் அதேவேளையில், பாகிஸ்தான் தனது சர்வதேச மனித உரிமைப் பொறுப்புகளை மதிக்க வேண்டும் என்றும், சிவில் உரிமைகளை முடக்குவதற்கோ அரசியல் எதிர்ப்பாளர்களை ஒடுக்குவதற்கோ அவசரநிலை அதிகாரங்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.