கவந்திஸ்ஸ யானைக்கு துப்பாக்கிச் சூடு – பிரதான சந்தேகநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்
இலங்கையின் புகழ்பெற்ற தந்த யானையான கவந்திஸ்ஸவுக்கு துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு பிரதான சந்தேகநபர்களையும் எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் இருவரும் இன்று (28) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மஹவ நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் 18ஆம் திகதி, வலான ஊழல் ஒழிப்புப் பிரிவினரும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து கல்கமுவ பகுதியில் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின்போது, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதன்போது இரண்டு துப்பாக்கிகளும் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் புகழ்பெற்ற காட்டு யானைகளில் ஒன்றான கவந்திஸ்ஸ, தனது வலது முன்னங்காலில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் கடுமையான உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்தது.
பல வாரங்களாக கால்நடை மருத்துவர்களின் சிகிச்சை பெற்று வந்த அந்த யானை, சிகிச்சை பலனின்றி கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி உயிரிழந்தது.
இந்தச் சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.