4 பில்லியன் ரூபா நிதி மோசடி குற்றச்சாட்டு: இரு நிறுவனப் பணிப்பாளர்கள் கைது
சுமார் 2,000 முதலீட்டாளர்களிடமிருந்து 4 பில்லியன் ரூபாவுக்கு அண்மித்த தொகையை மோசடியாகப் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், கண்டி மற்றும் கொஹுவலை பகுதிகளில் இயங்கும் தனியார் நிறுவனங்களின் இரு பணிப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் நிதி மற்றும் வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, சந்தேகநபர்கள் நேற்று (20) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு இலாபப் பங்குகளை வழங்குவதாக உறுதியளித்து அவர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுள்ளதுடன், பின்னர் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த மோசடி தொடர்பில் சுமார் 4 பில்லியன் ரூபா நிதி முறைகேடு இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் சுமார் 2,000 முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இரு நிறுவனங்களுக்கும் எதிராக இதுவரை 80 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நிறுவனங்களுடன் தொடர்புடைய மூன்று பணிப்பாளர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களை இன்று (21) நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.