2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் இன்று ஆரம்பம்
இலங்கையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் இன்று (21) நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகிறது.
இந்த விவாதம் எதிர்வரும் டிசம்பர் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் பொது விடுமுறை தினங்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் தினமும் காலை 9.30 மணிக்கு நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகும்.
வரவு – செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 14ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதற்கிடையில், 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நேற்று (20) நடைபெற்ற நிலையில், 97 மேலதிக வாக்குகளால் அது நிறைவேற்றப்பட்டது.
இதன்போது, வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 157 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிராக 60 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் மூன்றாவது முறையாக முன்வைக்கப்பட்டுள்ள 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில், மொத்த அரச செலவினம் 7.933 டிரில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 சதவீதத்திற்கு சமமான 1.753 டிரில்லியன் ரூபா வரவு – செலவுத் திட்டப் பற்றாக்குறை எதிர்பார்க்கப்படுகின்றது.