2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்படவில்லை – பிரதமர் ஹரிணி
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்வி மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நிராகரித்துள்ளார்.
மாறாக, மாணவர்களுக்கான நிதி உதவிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்களுக்கான மகாபொல புலமைப்பரிசில்கள் மற்றும் கொடுப்பனவுகள் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதித் திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதுடன், அதன் பாதுகாப்பு வரம்பும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றபோதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது சபாநாயகரை விளித்துப் பேசிய பிரதமர், நாடாளுமன்ற சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி தவறான தகவல்களைப் பரப்பும் முயற்சிகள் இடம்பெறுவதாகக் குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஆனால் விமர்சனங்கள் பொய்யான தகவல்களின் அடிப்படையில் அமையக்கூடாது என வலியுறுத்தினார்.
மேலும், இவ்வாறான செயற்பாடுகள் பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்ட தலையீடுகள் அல்ல என்றும், அவை நாகரிகமற்ற நடத்தையின் வெளிப்பாடுகள் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.