விமல் வீரவன்சவின் புகைப்பட சர்ச்சை: முறைப்பாட்டை நிராகரித்தது தெரண!
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, செயற்கை நுண்ணறிவால் (AI) மாற்றியமைக்கப்பட்டதாகக் கூறப்படும் புகைப்படமொன்றைத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காண்பித்த விவகாரத்தில், தெரண தொலைக்காட்சி தனது 360 நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கலிந்து கருணாரத்னவுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்துள்ளது.
குறித்த புகைப்படம் தொடர்பாக பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவின் அலுவலகம் முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள தெரண தொலைக்காட்சி, நேரடி ஒளிபரப்பின்போது புகைப்படம் குறித்து விமல் வீரவன்சவிடம் தொகுப்பாளர் உரிய கேள்விகளை எழுப்பியதாகத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஒக்டோபர் 15ஆம் திகதியிடப்பட்ட கடிதமொன்றின் மூலம், தெரண தொலைக்காட்சியின் செய்திப் பிரிவுப் பணிப்பாளர் யுவராஜ் அதுகோரள தனது பதிலை வழங்கியுள்ளார். தொலைக்காட்சி நிறுவனமோ நிகழ்ச்சித் தொகுப்பாளரோ தவறிழைத்ததாகக் கருதுவதற்கு எந்தவிதமான காரணமும் இல்லை எனவும், பகிரங்கமாகத் திருத்தமொன்றை வெளியிட வேண்டிய அவசியம் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒக்டோபர் 12ஆம் திகதி ஒளிபரப்பான 360 நிகழ்ச்சியின்போது, விமல் வீரவன்ச தனது கையடக்கத் தொலைபேசியில் குறித்த புகைப்படத்தைக் காண்பித்ததாகத் தெரண தெரிவித்துள்ளது. இதன்போது, புகைப்படத்தில் காணப்படும் நபர் சாதாரண பொதுமகன் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா எனத் தொகுப்பாளர் கலிந்து கருணாரத்ன நேரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்குப் பதிலளித்த விமல் வீரவன்ச, அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறியதுடன், பின்னர் குறித்த நபரை அமல் சலிந்த எனவும் அடையாளப்படுத்தியுள்ளார்.
எனவே, விருந்தினரின் கூற்றை எவ்விதக் கேள்வியுமின்றி ஏற்றுக்கொள்ளாமல், புகைப்படம் தொடர்பாக அவரிடம் நேரடியாக விளக்கம் கோரியதன் மூலம் தொகுப்பாளர் தனது ஊடகப் பொறுப்பை நிறைவேற்றியுள்ளதாக தெரண சுட்டிக்காட்டியுள்ளது.
நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விருந்தினர்கள் தாங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கும் சமர்ப்பிக்கும் புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களுக்கும் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேரடி ஒளிபரப்பின்போது விருந்தினர்களால் சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு புகைப்படம் அல்லது ஆவணத்தின் உண்மைத்தன்மையையும் அறிவியல் ரீதியாகச் சரிபார்ப்பது தொகுப்பாளருக்கும் நிகழ்ச்சி தயாரிப்புக் குழுவினருக்கும் சாத்தியமில்லை எனவும் தெரண குறிப்பிட்டுள்ளது.
மேலும், குறித்த நிகழ்ச்சியில் விமல் வீரவன்ச தெரிவித்த கருத்துகள் பின்னர் தொலைக்காட்சியில் மீள்ஒளிபரப்பப்படவில்லை என்றும், டிஜிட்டல் தளங்களிலும் மீண்டும் வெளியிடப்படவில்லை என்றும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பிரதி அமைச்சரின் அலுவலகம் கோரிய திருத்தத்தை வெளியிடுவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள தெரண, எனினும், புகைப்படம் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகத் தெரிவித்து பிரதி அமைச்சரின் அலுவலகம் கடிதமொன்றை அனுப்பியுள்ளமை குறித்து அடுத்த 360 நிகழ்ச்சியில் பார்வையாளர்களுக்கு அறிவிக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது.
புகைப்படம் தொடர்பான சர்ச்சை
2022ஆம் ஆண்டு அரகலய மக்கள் போராட்டத்தின்போது போராட்டக்காரர்களைப் பாதுகாக்க உதவியதாக அடையாளப்படுத்தப்பட்ட அமல் என்பவருடன் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க எடுத்துக்கொண்டதாகக் கூறப்படும் அசல் புகைப்படம், டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு குறித்த நபர் பௌத்த துறவியின் ஆடையை அணிந்திருப்பதைப் போன்று சித்தரிக்கப்பட்டுள்ளதாக அபேசிங்க குற்றஞ்சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக சமூக ஊடகங்களில் விளக்கமளித்த அவர், அசல் புகைப்படத்தையும் செயற்கை நுண்ணறிவால் மாற்றப்பட்டதாகக் கூறப்படும் புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். தொலைக்காட்சி விவாதத்தின்போது குறித்த படத்தைப் பயன்படுத்தி விமல் வீரவன்ச தவறான அரசியல் கருத்துகளை முன்வைத்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
எனினும், புகைப்படத்தைக் காண்பித்து கருத்துகளை வெளியிட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராகத் தமது அலுவலகம் கோரிக்கை அறிவிப்புக் கடிதம் (Letter of Demand) எதனையும் அனுப்பவில்லை எனப் பிரதி அமைச்சரின் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில், விருந்தினர் ஒருவரால் முன்வைக்கப்பட்ட கருத்துகள் மற்றும் ஆவணங்கள் தொடர்பாக நிகழ்ச்சித் தொகுப்பாளர் மீது ஏன் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன எனக் கேள்வி எழுப்பியுள்ள தெரண, புகைப்படம் மற்றும் அதுகுறித்த கூற்றுகளுக்கான பொறுப்பு விமல் வீரவன்சவையே சாரும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளது.