உடல்நலக் குறைவால் வயலில் சரிந்த யானை கவன்திஸ்ஸவை நேரில் சென்று பார்வையிட்டார் சஜித்!
இலங்கையின் மிகப்பெரியதும் உயரமானதுமான தந்தங்களைக் கொண்ட யானைகளில் ஒன்றாகக் கருதப்படும் கவன்திஸ்ஸவின் உடல்நிலை குறித்து ஆராய்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (16) சியம்பலாங்கமுவ பகுதிக்கு விஜயம் செய்துள்ளார்.
உடல்நலக் குறைவால் வயல்வெளியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட கவன்திஸ்ஸவுக்கு சிகிச்சையளித்து வரும் கால்நடை மருத்துவ அதிகாரிகளைச் சந்தித்த சஜித் பிரேமதாச, யானையின் தற்போதைய உடல்நிலை மற்றும் தொடர்ந்து வழங்கப்பட வேண்டிய சிகிச்சைகள் தொடர்பில் கேட்டறிந்தார்.
இதன்போது ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், கவன்திஸ்ஸவுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை இலங்கையில் தொடரும் மனித–யானை மோதலின் விளைவுகளில் ஒன்றாகும் எனக் குறிப்பிட்டார்.
யானைகளுக்குப் போதுமான வனவாழிடங்களை உறுதிப்படுத்துவதுடன், மக்களும் தமது விவசாய நடவடிக்கைகளைத் தடையின்றி முன்னெடுக்கக்கூடிய வகையில் மனித–யானை மோதலுக்குத் தீர்வுகாண வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், இலங்கையில் பெரிய தந்தங்களைக் கொண்ட யானைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், எஞ்சியுள்ள தந்த யானைகளைப் பாதுகாப்பதற்காக விசேட பாதுகாப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
இதற்காகத் தந்த யானைகளைப் பாதுகாப்பதற்கெனத் தனியான செயலணியொன்றை அமைப்பதுடன், மனித–யானை மோதலைக் குறைப்பதற்கான தேசிய வேலைத்திட்டமொன்றையும் முன்னெடுக்க வேண்டும் என அவர் முன்மொழிந்தார்.
கவன்திஸ்ஸவுக்குச் சிகிச்சையளிப்பதில் ஈடுபட்டுள்ள வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் தன்னார்வலர்களின் அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டினார்.
இதற்கிடையில், இலங்கையின் மிகப்பெரியதும் உயரமானதுமான தந்த யானைகளில் ஒன்றாகக் கருதப்படும் கவன்திஸ்ஸ, இன்று காலை சியம்பலாங்கமுவ பகுதியில் உள்ள வயல்வெளியொன்றில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக அந்த யானை உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மஹவ பகுதியில், கல்கமுவவின் கெட்டதியுல்வெவ பிரதேசத்தை வாழ்விடமாகக் கொண்ட இந்த யானையின் வலது முன்னங்காலில் ஏற்பட்ட காயத்துக்கு முன்னதாகச் சிகிச்சையளிக்கப்பட்டிருந்தது. குறித்த காயம் துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த செப்டெம்பர் 24ஆம் திகதி அந்தக் காயத்துக்கான சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும், பின்னர் காலில் ஏற்பட்ட காயம் குணமடைந்த போதிலும், தற்போது வேறொரு நோயினால் யானை பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கவன்திஸ்ஸவின் உடல்நிலை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஏற்கனவே நாடாளுமன்றத்தில் பல சந்தர்ப்பங்களில் கவலை வெளியிட்டிருந்ததுடன், இது தொடர்பில் அரசாங்கத்தினதும் சம்பந்தப்பட்ட அமைச்சரினதும் கவனத்தையும் ஈர்த்திருந்தார்.